சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. வெல்டிங் மெஷினோடு வந்த மர்ம நபர்கள்.. கும்மிடிப்பூண்டியில் ரூ. 12 லட்சம் கொள்ளை!
Gummidipoondi ATM Break : திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டர்கள் மூலமாக உடைத்து ரூ. 12 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சந்தை பகுதி அருகே உள்ள பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் 2 தனியார் வங்கிகளின் 2 ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஏடிஎம் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அந்த ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதேபோல, அருகில் இருந்த மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தையும் மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் ஏ. டி. எம் – இயந்திரத்தில் கொள்ளை
மேலும், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஏடிஎம் கொள்ளை சம்பவம் குறித்து தெரியவந்தது. இதில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 26- ஆம் தேதி) ரூ. 12 லட்சத்தை வங்கியின் ஊழியர்கள் நிரப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர்.
மேலும் படிக்க: தியேட்டரில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கையை நீட்டிய இளைஞருக்கு ஈரோடு நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு!




ஏ. டி. எம். இயந்திரத்தை உடைத்து ரூ. 12 லட்சம் கொள்ளை
அதன்படி, ஏடிஎம் மையத்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தங்களது உருவம் பதிவாகாமல் இருப்பதற்காக ஸ்பிரே அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வெல்டிங் கட்டர்கள் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ. 12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. இதேபோல, அருகில் உள்ள மற்றொரு தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தையும் அந்த மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர்.
டி. எஸ். பி. தலைமையில் 2 தனிப்படைகள் அமைப்பு
அப்போது, அந்த வழியாக ஆட்கள் நடமாட்டம் இருந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 12 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் புகைப்படம் வாங்கியதிலேயே ஊழலா? மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!