AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!

Free Modern Bicycles for Class 11 Students: தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளுக்கு நவீன மிதிவண்டிகளுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் புதிய திட்டத்திற்கான டெண்டரைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Aug 2026 10:11 AM IST

சென்னை, ஆகஸ்ட் 28: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்விச் சேவையை ஊக்கப்படுத்தவும், அவர்களின் பள்ளிப் பயணத்தை எளிதாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் மிதிவண்டி திட்டத்தில் தற்போது ஒரு படி மேலே சென்று, நவீன வசதிகளுடன் கூடிய மிதிவண்டிகளுடன் கூடுதலாக பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய உபகரணங்களை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: சட்டமன்ற மரபை உடைத்த முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் வரிசையில் திடீரென அமர்ந்து அதிரடி!!

டெண்டர் கோரி தமிழக அரசு:

இப்புதிய திட்டத்தின்படி, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி, பாதுகாப்புக்கான தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்காக, மிதிவண்டி மற்றும் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ டெண்டரைத் தமிழ்நாடு அரசு தற்போது கோரியுள்ளது. தகுதியான உற்பத்தி நிறுவனங்கள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை இந்த டெண்டரில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,32,388 மாணக்கர்களுக்கு நவீன சைக்கிள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, 2,37,138 மாணவர்களுக்கும், 2,95,250 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், தலைக்கவசங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. ஒப்பந்தம் பெற விரும்புபவர்கள் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளை செப்டம்பர் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம், தண்ணீர் பாட்டில்:

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உடல்நலத்தைப் பேணவும் இப்புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, மிதிவண்டியில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதை ஊக்குவிப்பது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள் தாகத்தைத் தணித்துக்கொள்ளத் தண்ணீர் பாட்டில் வழங்குவது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் எனப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. டெல்லி விரைந்த 4 தமிழ்நாடு அமைச்சர்கள்… மீட்புப் பணிகளில் வேகம்!!

150 நாட்களுக்கு தயார் செய்ய வேண்டும்:

தேர்வு செய்யப்படும் தகுதியான நிறுவனத்திற்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 150 நாட்களுக்குள் அனைத்து மிதிவண்டிகளும், உபகரணங்களும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன்பின்னர், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 11-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இவை முறைப்படி விநியோகிக்கப்படும். கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ள செய்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Follow Us