Nepal Flood: நேபாள வெள்ளத்தில் சிக்கிய இரட்டை குழந்தைகளை மீட்டு அரவணைத்த ராணுவத்தினர்.. வைரலாகும் வீடியோ..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தங்களிடம் வைத்திருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மீட்புப் பணிகள் கடினமான சூழலில் நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகளை ராணுவ வீரர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
ஆகஸ்ட் 28, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட இரட்டை குழந்தைகள் – வைர்ல் வீடியோ:
VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. pic.twitter.com/12fLMnjS0f
— Press Trust of India (@PTI_News) August 27, 2026
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தங்களிடம் வைத்திருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மீட்புப் பணிகள் கடினமான சூழலில் நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகளை ராணுவ வீரர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
மீட்புப் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள்:
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
ரேடியோ நேபாளின் தகவலின்படி, ராசுவா மாவட்டத்தின் திமுரே பகுதியில் இருந்து 123 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 94 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 29 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டது எப்படி?
ராசுவா மாவட்டம் மற்றும் நேபாளம்-சீனா எல்லைப் பகுதிகள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிச்சரிவு அல்லது பனிப்பாறை சரிவு காரணமாக லெண்டே ஆற்றின் நீரோட்டத்தில் தடுப்பு ஏற்பட்டு, பின்னர் மிகப்பெரிய அளவில் தண்ணீர் மற்றும் சேறு வெளியேறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, பல குடியிருப்புகள் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இது வெறும் நிவாரணம் இல்ல… நேபாள மக்களுக்கு இந்தியா அனுப்பிய பெட்டிகளில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியான வாசகம்!
350-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:
தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, நேபாளம் மற்றும் சீனாவில் சேர்த்து குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் தகவலின்படி, குறைந்தது 353 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என கூறப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த உள்கட்டமைப்பு, கடினமான இமயமலை நிலப்பரப்பு மற்றும் துண்டிக்கப்பட்ட சாலை இணைப்புகள் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் சிக்கியுள்ள பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.