AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்

Nepal Flash Flood: தமிழகத்தைச் சேர்ந்த 83 யாத்திரிகர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 86 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அமைச்சர் ஏ.ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக 106 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இதில் 3 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Aug 2026 08:52 AM IST

ஆகஸ்ட் 28, 2026: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் 290 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட சமீபத்திய தகவலின்படி, 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 63 தொழிலாளர்களும், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரும் அடங்குவர்.

தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்:

தமிழகத்தைச் சேர்ந்த 83 யாத்திரிகர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 86 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அமைச்சர் ஏ.ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக 106 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இதில் 3 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். வெள்ளப்பெருக்கு காரணமாக 86 பேரை தற்போது கண்டறிய முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் 32 பேர் மாயம்:

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 32 யாத்திரிகர்கள் மாயமாகியுள்ளதாக கொல்கத்தாவைச் சேர்ந்த பயண நிறுவனத்தின் நிறுவனர் திவ்யஜோதி பாசு தெரிவித்தார். இதில் 30 சுற்றுலாப் பயணிகளும், 2 ஊழியர்களும் அடங்குவர். முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராயின் மருமகள் ஷர்மிஷ்தா பௌமிக் ராய் மற்றும் 61 வயதான சுபாஷ் சந்திர கோஷ் ஆகியோரும் மாயமானவர்களில் உள்ளனர்.

மேலும் படிக்க: இது வெறும் நிவாரணம் இல்ல… நேபாள மக்களுக்கு இந்தியா அனுப்பிய பெட்டிகளில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியான வாசகம்!

பிற மாநிலங்களின் நிலை என்ன?

குஜராத்தில் இருந்து நேபாளம் சென்ற 17 பேரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள். ஆனந்த் பகுதியைச் சேர்ந்த பிமல்குமார் படேல் மற்றும் அவரது மனைவி ஜைமினாபென் ஆகியோரும் மாயமானவர்களில் அடங்குவர்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் நேபாளம்-சீனா எல்லைப் பகுதிகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த 13 பேர் நேபாளம் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிகளில் சிக்கியுள்ளனர். இவர்களில் 11 பேர் பெங்களூரு நகரைச் சேர்ந்தவர்கள்.

மேலும் படிக்க: அனைவருக்கு வங்கி சேவை – 12வது ஆண்டில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம்

மகாராஷ்டிராவில் 106 பேர் பத்திரமாக மீட்பு:

நேபாளத்தில் சிக்கியிருந்த நாக்பூரைச் சேர்ந்த 106 சுற்றுலாப் பயணிகள், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலையீட்டின் மூலம் காத்மாண்டுவில் இருந்து பீகார் நோக்கி பத்திரமாக புறப்பட்டனர்.

ஒடிசாவைச் சேர்ந்த 3 பேரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நேபாள வெள்ளத்தில் மாயமாகியுள்ளார். மேலும், கேரளாவைச் சேர்ந்த சுமார் 33 பேர் மாயமாகியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைத் தேடி சுமார் 14 பேர் மாநில உதவி எண்ணை தொடர்புகொண்டுள்ளனர்.

Follow Us