சேலத்தில் காவல் வாகனம் கவிழ்ந்து விபத்து.. 18 காவலர்கள் பலத்த காயம்.. கள்ளச்சார வேட்டைக்கு சென்றபோது சோகம்!
Yercaud Police Vehicle Accident : சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பகுதியில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போது, காவல் துறை டெம்போ வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 18 காவலர்கள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்று வியாழக்கிழமை காலை காவல் ஆய்வாளர் ஆனந்தநாயகி தலைமையில் 10- க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் என மொத்தம் 18 பேர் காவல்துறையின் டெம்போ வாகனத்தில் ஏற்காடு பகுதியில் கள்ளச்சாராய வேட்டைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம், ஏற்காடு பகுதியில் குண்டூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வாகனம் தறிகெட்டு ஓடி மலைப்பாதையில் தாறுமாறாக சென்று பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த போலீசார் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
காவல் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
உடனே, அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, விபத்தில் சிக்கிய போலீசாரும் தங்களை மீட்குமாறு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!




அரசு மருத்துவமனையில் 18 காவலர்களுக்கு சிகிச்சை
தொடர்ந்து, அந்த காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த திடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்காடு பகுதியில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற காவலர்கள் வாகனம் தலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், அந்த பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக விபத்தில் சிக்கி காயம் அடைந்த காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: காலை உணவில் அடுத்தடுத்து பகீர்.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்.. செங்கல்பட்டு அரசு பள்ளியில் பரபரப்பு!