தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!
Ministers N. Anand Latest Speech : தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களின் வங்கி கணக்கு விவரங்களை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கண்காணித்து வருவதாகவும், தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து விடுவார் என்றும் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல் ( மதுராந்தகம் தொகுதி), சத்யபாமா ( தாராபுரம் தொகுதி) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் இன்று புதன்கிழமை மதுராந்தகம் தாலுகா, முதுகரை ஊராட்சி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள கண்மாய் அருகே விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் அமைச்சர் ஆனந்த் தவெக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம்
அப்போது, தமிழகத்தில் கிராமப்புறங்களில் 100 நாட்களாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாட்களாக உயர்த்தி உள்ளோம். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மதுராந்தகம் தொகுதி பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பொதுமக்களின் பணத்தில் ஒரு ரூபாய் கூட நாங்கள் எடுக்க மாட்டோம். அதனை மற்றவர்கள் எடுக்கவும் விடமாட்டோம். அப்படியே, எடுத்தாலும் எடுத்தவர்களை விட மாட்டோம்.
மேலும் படிக்க: காலை உணவில் அடுத்தடுத்து பகீர்.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்.. செங்கல்பட்டு அரசு பள்ளியில் பரபரப்பு!




அமைச்சர்கள் வங்கி கணக்குகளை முதல்வர் கண்காணிக்கிறார்
இதே போல, மக்கள் நலத்திட்டங்களில் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்ய யார் முயற்சித்தாலும் அதற்கு அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரின் வங்கி கணக்குகளையும் முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தீவிரமாக கண்காணித்து வருகிறார். எனவே, சட்டத்துக்கு புறம்பாக யாரும் தவறு செய்தாலும், ஊழல் செய்தாலும் முதல்வர் விஜய் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து விடுவார். தமிழகத்தில் கடந்த 50, 60 ஆண்டு கால திராவிட ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.
தவெக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள்
தற்போது வரை பலருக்கும் இடம் தொடர்பான பட்டா பிரச்சனை இருந்து வருகிறது. அந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். எனவே, தமிழக வெற்றிக் கழக அரசின் மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விசில் சின்னத்துக்கு தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்று பேசினார்.
மேலும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!