AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலை உணவில் அடுத்தடுத்து பகீர்.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்.. செங்கல்பட்டு அரசு பள்ளியில் பரபரப்பு!

Chengalpattu School Students Faint : செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருப்பது தெரியாமல் சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை உணவில் அடுத்தடுத்து பகீர்.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்.. செங்கல்பட்டு அரசு பள்ளியில் பரபரப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Sep 2026 19:40 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேலகண்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அண்மையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் அடிப்படையில், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 23- ஆம் தேதி) மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக சாம்பார் சாதம் மற்றும் உப்புமா வழங்கப்பட்டது. இந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மாணவரின் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவில் பல்லி இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியரிடம் அந்த மாணவர் தெரிவித்தார்.

உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம்

இதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, காலை உணவு சாப்பிட்ட சில மாணவ, மாணவிகள் சிறிது நேரத்தில் திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே காலை உணவு சாப்பிட்ட 9 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 11 பேரை ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு ஆட்டோ மூலமாக அருகில் உள்ள பாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!

ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் கடும் வாக்குவாதம்

இதனிடையே, இந்த தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் குவிய தொடங்கினர். தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு தயாரித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை

அதன்படி, உணவில் பல்லி விழுந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளியில் காலை உணவு தயாரிக்கப்பட்டது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கடலூரை உலுக்கிய கொடூரம்.. 3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு.. பின்னணியில் சிக்கிய ஐடிஐ மாணவன்!

Follow Us