தமிழகத்தில் ஜனவரி மாதத்துக்குள் தவெக ஆட்சி கவிழும்.. திமுக ஆட்சியமைக்கும்.. ஆர். எஸ். பாரதி!
DMK R S Bharathi Latest Speech : தமிழகத்தில் வருகிற 2027- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என் று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்து உள்ளார் .
தமிழகத்தில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக செங்கல்பட்டில் திராவிட முன்னேற்ற கழக சட்டத்துறை சார்பில் இன்று வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பங்கேற்று பேசியதாவது: மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது வேறு உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு ராஜினாமா செய்திருந்தாலோ தான் இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் இதுபோன்ற நிலை இல்லை. ஜனநாயகம் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவே இடைத்தேர்தல் நடைபெறுவதாக திமுகவின் முப்பெரும் விழாவில் தலைவர் மு. க. ஸ்டாலின் கூறிவிட்டார். இதனை மக்களிடம் திமுக வழக்கறிஞர்கள் தெளிவாக எடுத்து கூற வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
2 தொகுதிகளுமே திமுகவுக்கு சாதகம்
இதனை, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இடைத்தேர்தல் நடைபெறும் 2 சட்டமன்ற தொகுதிகளுமே திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் தான். தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தலுக்கு முன்னதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என வாக்காளர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகளைத் தவிர புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் மக்களுக்காக கொண்டு வரப்படவில்லை.
மேலும் படிக்க: “ஜெம் வீரமணியால் எனது உயிருக்கு ஆபத்து” பகீர் கிளப்பிய உதவியாளர் சாந்தி.. வீடியோ வாக்குமூலம் வைரல்!
2027 ஜனவரி-க்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்
இதனை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இது திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமையும். தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் 2027 ஜனவரி மாதத்துக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே, வரலாற்று வெற்றியை பெறுவதற்கு அனைவரும் இடைவிடாது தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பேசினார்.
2 தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஆர். எஸ். பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்.. மேலும் புதிய ஆபாச வீடியோக்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி!