AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்கள் வாங்கியது யார் பரிந்துரை? நீதிபதிகள் சரமாரி கேள்வி.. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுவரை தவறு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைக்கூட கண்டறிய முடியாதது குறித்துக் கேள்வி எழுப்பினர். மேலும், பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி தொடர்பான புத்தகத்தைப் பரிந்துரைக் குழு பரிந்துரை செய்திருந்தாலும், அந்தப் புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து, புத்தகக் கொள்முதல் தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்கள் வாங்கியது யார் பரிந்துரை? நீதிபதிகள் சரமாரி கேள்வி.. 
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Nov 2026 20:02 PM IST

நவம்பர் 11, 2026: தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் மற்றும் கோவை பெரியார் அறிவுலகத்திற்காக புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்ய யார் பரிந்துரை செய்தது, நான்கு நிலைகளைக் கொண்ட தேர்வு நடைமுறைகளைத் தாண்டி புத்தகங்கள் வாங்கப்பட்டனவா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை எனப் புகார்

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2024 ஜூன் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புத்தகங்களைத் தேர்வு செய்வது மற்றும் கொள்முதல் செய்வது தொடர்பாகப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. ஆனால், அவற்றைப் பின்பற்றாமல் 2025 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரை கோவை பெரியார் அறிவுலகம் உட்பட கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை என்ன சொல்கிறது?

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக நவம்பர் 6-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தனர்.

நவம்பர் 7-ம் தேதி விசாரணை தொடங்கப்பட்டதாகவும், நவம்பர் 9-ம் தேதி அகல் விளக்கு பதிப்பகத்திடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறினர். மேலும், கொள்முதல் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பொது நூலகத்துறை இயக்குநரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், நவம்பர் 10-ம் தேதி எழுத்தாளர் பெருமாள் முருகன், சதீஷ்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன..  முதல்வர் விஜய் என்ன பேசினார்.. முழு விவரம்!

இதுவரை மூன்று வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் வழக்குப் பதிவு செய்து விரிவான விவரங்களைத் தாக்கல் செய்ய நான்கு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது.

அகல் விளக்கு பதிப்பகத்தைப் பரிந்துரை செய்தது யார்?

இந்த வழக்கின் முக்கியமான கட்டமாக, காணொலி வாயிலாக ஆஜரான பொது நூலகத்துறை இயக்குநரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து புத்தகங்களை வாங்க யார் பரிந்துரை செய்தது என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு 112 உறுப்பினர்களைக் கொண்ட குழுதான் எந்தெந்த புத்தகங்களைக் கொள்முதல் செய்யலாம் எனப் பரிந்துரை செய்யும் என்று நூலகத்துறை இயக்குநர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து 2,335 புத்தகங்களை வாங்கப் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், அதில் 1,700 தலைப்புகளில் தலா ஒரு புத்தகம் வாங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்காக ரூ.17 லட்சம் செலுத்தப்பட்டதாகவும், இந்தக் கொள்முதல் கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

நான்கு குழுக்களைக் கடந்து புத்தகங்கள் வாங்கப்பட்டதா?

புத்தகக் கொள்முதல் தொடர்பாகப் பரிந்துரைக் குழு, தேர்வுக்குழு, கொள்முதல் குழு மற்றும் உயர்மட்டக் குழு என நான்கு நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே புத்தகங்களை வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த நான்கு குழுக்களையும் கடந்து அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டனவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தவறு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைக்கூட இதுவரை கண்டறிய முடியவில்லையா என்றும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் பரிந்துரைக் குழுவினர் மீது சுமத்துவது ஏன் என்றும் நூலகத்துறை இயக்குநரிடம் கேள்வி எழுப்பினர்.

பத்ரி சேஷாத்ரி முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்!

கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்திடமிருந்து மட்டும் ரூ.17 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது அதிகமானது என்றும், இதற்கு முன்னதாக முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 22 ஆண்டுகளாகப் பதிப்பகம் நடத்தி வரும் தங்களது நிறுவனத்திடமிருந்து வெறும் ரூ.23,980 மதிப்பிலான புத்தகங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: நடுரோட்டில் முதியவர் வெட்டி படுகொலை.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு.. 7 பேர் கும்பல் அதிரடி கைது!

தென்காசி மாவட்டத்தில் மட்டும் அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து ரூ.27 லட்சத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இதில் தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. அந்தத் தவறை எளிதாகப் பரிந்துரைக் குழுவினர் மீது சுமத்துவது ஏற்கத்தக்கதல்ல. அந்தக் குழுவில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் நிபுணத்துவம் பெற்றவர்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான நூல்கள் தயாரிக்கப்பட்டு நூலகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நான்கு நிலைக் குழுக்கள் இருக்கும் நிலையில், எந்தக் கட்டத்தில் அகல் விளக்கு பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும் என்றும், இந்த விசாரணைக்கு தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.

நவம்பர் 17-க்கு ஒத்திவைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுவரை தவறு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைக்கூட கண்டறிய முடியாதது குறித்துக் கேள்வி எழுப்பினர். மேலும், பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி தொடர்பான புத்தகத்தைப் பரிந்துரைக் குழு பரிந்துரை செய்திருந்தாலும், அந்தப் புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, புத்தகக் கொள்முதல் தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி திங்கட்கிழமை எழுத்துப்பூர்வமான அறிக்கையுடன் ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Follow Us