தமிழகத்தில் தொடரும் கொலை, குற்றச் சம்பவங்கள்.. முதல்வர் விஜயுடன் டிஜிபி, உளவுத்துறை ஐஜி திடீர் ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் சந்தித்துப் பேசியுள்ளனர். மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம், அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், அவற்றின் மீதான விசாரணை முன்னேற்றம் மற்றும் குற்றங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 11, 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், முதலமைச்சர் விஜயை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
குறிப்பாக, தீபாவளி பண்டிகையன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சியில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கொலைச் சம்பவங்கள் பதிவாகி இருந்தது.
மேலும் படிக்க: நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?
இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக, காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முதல்வருடன் உயர் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை
இந்தச் சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் சந்தித்துப் பேசியுள்ளனர். மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம், அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், அவற்றின் மீதான விசாரணை முன்னேற்றம் மற்றும் குற்றங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு கைகள் கட்டப்பட்டுள்ளது.. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!
முன்னதாக, தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் மாநிலம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களைக் குறிவைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இரண்டு நாட்களில் 443 ரவுடிகள் கைது!
கடந்த நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், 8,626 ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு, 443 பேர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், 1,624 போதைப்பொருள் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டதில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை மற்றும் தாக்குதல் வழக்குகளில் தொடர்புடைய 2,924 பேரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டதாகத் தகவல்
இதற்கிடையே, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி தினத்தன்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்கள் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.