அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!
Transport Department : தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கு பயணிகள் செல்போனில் சத்தமாக பாடல் இசைக்க கூடாது, பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரும் சத்தமாக பாடல்கள் ஒலிக்க விடக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது .
தமிழகத்தில் பொதுமக்களின் போக்குவரத்து சேவையில் அரசு பேருந்துகள் முக்கிய பங்காற்றி வருகின்றது. தமிழக முழுவதும் தினந்தோறும் ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், இதன் காரணமாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மத்தியில் இரைச்சல் நிலவுவதாகவும் பயணிகள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதில், குறிப்பாக நீண்ட தொலைவு பயணம் செய்யும் முதியவர்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், உடல்நல குறைபாடு உள்ளவர்கள் பாட்டு சத்தத்தின் காரணமாக வெறும் மன உளைச்சலை தருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனுக்கு புகார்கள் சென்றன.
அரசு பேருந்து பயணிகளுக்கு புதிய நெறிமுறைகள்
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல் ராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அல்லாமல் செல்போன் பயன்படுத்தவும், ஸ்பீக்கர் போனில் பேசுவதும், வீடியோ பார்ப்பது தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்ட பெண் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் சோகமான நிகழ்வு!




விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட அறிவுறுத்தல்
அத்துடன், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஹெட் போன் அல்லது இயர் போன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளில் பாடல்களை சத்தமாக ஒலிக்க விடக்கூடாது. இது தொடர்பாக 24 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 16 சென்டிமீட்டர் அகலம் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பயணிகளுக்கும், பயணிகளால் சக பயணிகளுக்கும் பயணத்தின் போது தொந்தரவு இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் வழிமுறைகளை பின்பற்றுக
மேலும், அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஷிப்ட் ப்ரீபிங் நேரத்தில் மேற்கண்ட வழிமுறைகளை பயணிகளிடம் கட்டாயம் எடுத்துரைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பாட்டு சத்தம் காதை கிழிக்கும் வகையில் ஒளிபரப்புவதும், சக பயணிகள் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பதும், சத்தமாக செல்போனில் உரையாடுவதும் இருந்து வந்தது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!