மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய அரசுப் போக்குவரத்துக் கழக செயலி!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொபைல் செயலியும் தற்போது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது தவெக கொடி நிறத்தில் இருப்பதாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த செயலியும் தற்போது சிவப்பு மஞச்ள் நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 31 : கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு பேருந்துக்கு தவெக கொடி நிறத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நிறம் பூசப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொபைல் செயலியும் தற்போது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது தவெக கொடி நிறத்தில் இருப்பதாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தவெக கொடி நிறத்துக்கு மாறிய அரசுப் போக்குவரத்துக் கழக செயலி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக செயலியில் முகப்பு பக்கத்தில் போக்குவரத்துத்துறை முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.டிஎன்எஸ்டிசி செயலியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என தவெக கொடி வண்ணத்தில் மாற்றப்பட்டு மேல் பகுதியில் முதல்வர் விஜய்யின் படமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது. முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த செயலியும் தற்போது சிவப்பு மஞச்ள் நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முகப்பில் முதல்வர் விஜய்யின் படமும் வலது பக்கம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் இலச்சினையும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம்?.. கொத்துக் கொத்தாகப் பலி.. கோவையில் அதிர்ச்சி!!




தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போக்குவரத்துத் துறை மேம்படுத்தும் நோக்கில் பழைய டெண்டர்களை ரத்து செய்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் டிஎன்எஸ்டிசி செயலியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், டிஎன்எஸ்டிசியின் வலைதளத்தின் நிறம் இதுவரை மாற்றப்படவில்லை.
சில நாள்களுக்கு முன், அரசுப் பேருந்துகளின் நிறத்தை தவெக கொடியின் நிறமான சிவப்பு, மஞ்சளில் மாற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தின.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் பச்சை நிறத்தில் இருந்த பேருந்துகள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. கைதிலிருந்து தப்பினார் செந்தில் பாலாஜி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னதாக புதிய அரசுப் பேருந்துகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் ஐடி விங் நிர்வாகி சிடிஆர். நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், அரசுத் திட்டங்கள் அல்லது அரசு சொத்துகளில் கட்சியை முன்னிறுத்தும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், அரசின் எந்தத் திட்டத்திலும் கட்சிக் கொடி அல்லது சின்னங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் ‘விசில்’ சின்னம் அறிவிக்கப்பட்டவுடன் மக்களிடம் பரவலாக அறிமுகமானது. அதற்கு கூடுதல் விளம்பரங்கள் தேவையில்லை. அரசின் வாகனங்கள் அல்லது இயந்திரங்களை கட்சி விளம்பரத்திற்காக பயன்படுத்துவதை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்” என்று தெரிவித்தார்.