முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..
Tamil Nadu Budget 2026: பொதுமக்களிடம் இந்த பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது, சாமானிய மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜூலை 31, 2026: தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட், வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன இடம்பெற உள்ளன என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்:
அரசின் முதல் பட்ஜெட் என்பதால், முதலமைச்சர் விஜய் அதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் அவர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, அவை எப்போது நிறைவடையும் என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறார். மேலும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் மேம்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட்ஜெட் தயாரிப்பில் மும்மரம் காட்டும் முதல்வர் விஜய்:
இதற்கிடையில், அவ்வப்போது கள ஆய்வுகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா?
இதனால், இந்த பட்ஜெட்டில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அதுகுறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!
மேலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணி, சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், விசைத்தறித் தொழில் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் அல்லது வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என விசைத்தறித் தொழிலாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பொது மக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன?
பொதுமக்களிடம் இந்த பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது, சாமானிய மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய முதலீடுகள், அதன் மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நாகர்கோவில் சபரிவர்மன் சிறை மரணம்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றபோது, கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி வெளிக்கொண்டு வரப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். அந்த வகையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.