AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!

Mekedatu Issue CM Vijay Holds Meeting: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி மற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் திறக்காத நிலை குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Jul 2026 11:29 AM IST

சென்னை, ஜூலை 31: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு முயன்று வரும் சூழலிலும், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைத் திறக்க மறுத்து வரும் நிலையிலும், முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவின் விதிகளை மீறி கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், கர்நாடக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறது.

இதையும் படிக்க: நாகர்கோவில் சபரிவர்மன் சிறை மரணம்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

கர்நாடகாவின் நிலப்பாடு:

எல்நினோ பாதிப்பு காரணமாகத் தென்மேற்கு பருவமழை சுமார் 25% வரை குறைந்துள்ளதாகக் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அணைகளில் உள்ள நீர் கர்நாடகாவின் சொந்தக் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருப்பதால், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில அரசு மறுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு செவிமடுக்காத சூழலே தொடர்கிறது.

முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை:

இத்தகைய சூழலில், சட்ட ரீதியாக அடுத்தகட்டமாகத் தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகச் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு நிர்வாகத் துறைச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

காவிரி நதிநீர் வழக்கில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை எதிர்கொள்வது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகப் பயணம் ஏற்படுமா?

முன்னதாக, காவிரி நீர் பெற பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சரைச் சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும், முதல்வர் விஜய் வந்தாள் அவரை வரவேற்று காவிரி அணைகளின் நிலவரத்தை நேரில் காண்பிக்கத் தயார் எனக் கூறியிருந்தார்.

இருப்பினும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயப் பிரதிநிதிகளும் “சமரசப் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளையே அரசு மேற்கொள்ள வேண்டும்” என முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!

இதனால், திட்டமிட்டபடி முதல்வர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொள்வாரா அல்லது சட்டரீதியான வழக்குகளைத் தீவிரப்படுத்துவாரா என்பது குறித்த முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us