“காவிரி விவகாரத்தில் வாய் மூடி மௌனமாக இருக்கும் முதல்வர் விஜய்!”.. இபிஎஸ் கடும் கண்டனம்!!
EPS Slams CM Vijay Over Cauvery Dispute: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்தும் முதல்வர் விஜய் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
சென்னை, ஜூலை 31: காவிரியில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் கூறிய பின்பும், முதலமைச்சர் விஜய் எந்தவித பதிலும் பேசாமல் வாய் மூடி மௌனமாக இருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: முந்தைய திமுக அரசின் ‘தாயுமானவர்’ திட்டம் பெயரை மாற்றிய தவெக அரசு!!
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்க:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடனும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது 75,000 ரூபாய் வரை கடன் பெற்ற சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றியுள்ளது.
போராட்ட எச்சரிக்கை:
வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில், வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தவறினால், தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கர்நாடகா செல்லக் கூடாது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்த பிறகும், தமிழக முதலமைச்சர் விஜய் அதுபற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தைக்காகப் பெங்களூரு செல்வதைக் கைவிட வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
உடனடியாக மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சுப்ரீம் கோர்ட் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மட்டுமே அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால் காவிரி ஆற்று நீரை நம்பியுள்ள தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடும் குடிநீர்ப் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.