2 காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. ஜெம் வீரமணி வழக்கு காரணமா?
Arun And Kannan IPS Officers Transfer : தமிழகத்தில் இரு காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு பின்னாள் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக போலீஸ் அகாடமி இயக்குனராக இருந்து வரும் அருண் ஐபிஎஸ் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், அருண் ஐபிஎஸ் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து வந்தார். இதை தொடர்ந்து, அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக மாற்றப்பட்ட நிலையில், தற்போது, அவருடன் சேர்த்து கோவை மாநகர காவல் ஆணையரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னால், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வழக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் சென்னை மாநகர காவல் துறையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள்.
ஜெம் வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்காத அதிகாரி
இதில், கண்ணன் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது அவரிடம் ஜெம் வீரமணி தொடர்பாக புகார் அளித்ததாக காங்கிரஸ் பட்டியலின அணி தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், கடந்த 2024- ஆம் ஆண்டு கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஐபிஎஸ் இடம் ஜெம் வீரமணி தொடர்பாக புகார் அளித்திருந்தேன். ஆனால், இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: “ஜெம் வீரமணியால் எனது உயிருக்கு ஆபத்து” பகீர் கிளப்பிய உதவியாளர் சாந்தி.. வீடியோ வாக்குமூலம் வைரல்!




ஐபிஎஸ்- அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை
இது மட்டுமின்றி விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையராக இருந்து வரும் மகேஷ் குமார் என்பவரிடமும் காங்கிரஸ் பட்டியலென தலைவர் ரஞ்சன் குமார் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், மகேஷ் குமார் என்ன விளக்கம் அளிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அத்துடன், கண்ணன் ஐபிஎஸ்ஸிடம் கடந்த 2024 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட புகாரில் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை.
கிடப்பில் கிடந்த வழக்கு தூசி தட்டி விசாரணை
நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தார் என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி ஏற்ற அமல்ராஜ் பழைய வழக்குகளை தூசி தட்டிய நிலையில், கிடப்பில் கிடந்த ஜெம் வீரமணி வழக்கை எடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்.. மேலும் புதிய ஆபாச வீடியோக்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி!