அதிமுக பிளவால் மனம் பொறுக்கவில்லை.. உலகை விட்டே போகிறேன்.. தஞ்சாவூர் நிர்வாகி தீக்குளித்த தற்கொலை!
AIADMK Member Suicide : அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியால் மன வறுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் தஞ்சாவூர் வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரன் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் உப்புக்கார வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( 32 வயது). இவர், அதிமுகவின் வர்த்தக அணியின் மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான இவர், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி தோல்வி தழுவியதால் மிகுந்த மன வேதனை அடைந்து வந்தார். மேலும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிளவு காரணமாக கடும் அதிர்ச்சியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக நிர்வாகி மகேந்திரன் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பிளவு பட்ட அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்
இதனால், வாழ்வதற்கு விருப்பமில்லை. அடுத்த பிறவியிலும் அதிமுகவின் எளிய தொண்டனாக நான் பிறக்க வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன். எனது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து மகேந்திரனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் படிக்க: திருவள்ளுவர் காவி உடை விவகாரம்.. ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்.. கொதித்தெழுந்த வைகோ!




தீக்குளித்து தற்கொலை செய்த அதிமுக நிர்வாகி
இந்த நிலையில் திருப்பனந்தாள் அருகே பாலூர் என்ற இடத்தில் ஆண் நபர் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்து கிடந்தது திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் சட்டமன்ற தோல்வி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, மகேந்திரனின் சடலத்தை போலீசார் மீட்டு உடல் கூராக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகேந்திரன் உடலுக்கு எடப்பாடி மரியாதை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பாரதி மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் மருத்துவமனையில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து, திருப்பனந்தாளில் மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தற்கொலை செய்து கொண்ட மகேந்திரனின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். மேலும், அதிமுக சார்பில் ரூ.30 லட்சம் மற்றும் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் என ரூ.55 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: போர் பதற்றம் எதிரொலி… வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு!