2- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி ஆசிரியர் கைது.. கடலூரில் அதிரடி நடவடிக்கை!
Cuddalore Private School Teacher Arrested : கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 2- ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 6- வயது சிறுமி ஒருவர் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில், அகஸ்டின் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வகுப்பறையில் தனியாக அந்த சிறுமி தனியாக இருந்த போது, ஆசிரியர் அகஸ்டின் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த நிகழ்வு குறித்து மாலையில் வீடு திரும்பியதும், தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்
அப்போது, பள்ளியின் உள்ளே இருந்த ஆசிரியர் அகஸ்டினை மாணவியின் உறவினர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால், பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!




போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளியின் ஆசிரியர் அகஸ்டினை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதை போல
தனியார் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும், அவர் கைதான சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நல்லெண்ணங்களை கற்பிக்கக் கூடிய ஆசிரியரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், வேலியே பயிரை மேய்வது போல இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் படிக்க: தேனியில் பயங்கரம்.. காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது!