தமிழ்நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் சரிவை நோக்கி செல்வதாகவும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் தமிழகத்தில் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்கிற்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 10, 2026 நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 9 : தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் சரிவை நோக்கி செல்வதாகவும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். தென்னிந்திய மகப்பேறுயியல் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர், மருத்துவமனை வசதி இல்லாத பகுதிகளில் மட்டுமே குறைந்த அளவில் மருத்துவமனைக்கு வெளியே பிரசவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்கிற்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 10, 2026 நாளை வெளியிடப்படும் என்றும், கவுன்சிலிங் அறிவிப்பும் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கடந்த 2017ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 66 சதவிகிதம் அளவுக்கு பிரசவங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 51 சதவிகிதமாக குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பிரசவம் பார்க்கப்படுவதுடன், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க : ‘நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ளுங்கள், என்னை எளிதில் சந்திக்கலாம் ‘ – ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்திய சரத்குமார்




மேலும் பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க செலவு அதிகம் என்பதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் தரமான மகப்பேறு சிகிச்சை வழங்கப்படுவதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்க தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
மேலும் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டே தாய்மாமன் தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்காக செலவிடப்படும் தொகையை மகப்பேறு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அவசியம் என்றார்.
தமிழ்நாட்டில் குறைந்த மகப்பேறு விகிதம்
தமிழ்நாட்டில் மகப்பேறு விகிதம் 1.4 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு தம்பதிக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற அளவு இருந்தால் தற்போதுள்ள மக்கள் தொகை நிலையாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் அந்த விகிதம் குறைந்துள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமிழக மக்கள் தொகையில் 16 சதவிகிதம் வரை இருக்கின்றனர்.
இதையும் படிக்க : “விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!
இதனையடுத்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது குறித்து எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்தால் மனிதவளம் குறைவது பொது நலப் பிரச்சினையாக மாறக்கூடும் தற்போதுள்ள மக்கள் தொகை குறையாமல் பார்த்துக்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றார்.