தனியார் மயத்தை கைவிடுக.. மின்துறையில் உடனடியாக இதை செய்க.. தவெக அரசுக்கு சண்முகம் வலியுறுத்தல்!
Shanmugam Latest Pressmeet : தமிழக மின் துறையில் தனியார் மயத்தை கைவிட்டுவிட்டு நிரந்தர பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார். அதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழக மின்துறையில் தனியார் மயத்தை கைவிட்டு நிரந்த பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 6 மாதத்துக்குள் மின் கட்டண கணக்கிட்டு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதற்காக தனியாருக்கு டெண்டர் வெளியிடப் போவதாகவும், இந்த பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மின் உற்பத்தி, மின் விநியோகம், மின் கடத்தல், மின் நுகர்வு கணக்கீடு என அனைத்திலும் தவெக அரசு தனியார் மையத்தை நோக்கி பயணிக்கிறது. இந்த தனியார் மய முறையை அரசு திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. போதிய பயிற்சி இல்லாததால் தோராயமாக கணக்கெடுக்கும் முறையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஏற்படும் தவறுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மின்துறையில் 13 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை
மின்கணக்கீட்டு பணிகளில் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவர் கூட நியமனம் செய்யப்படவில்லை. மின்சார வாரியத்தில் அனுமதி அளிக்கப்பட்ட 6,591 மின்துறை ஊழியர் பணியிடங்களில் தற்போது 1,591 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிகழ் ஆண்டில் மின்சாரத் துறையில் காலியாக உள்ள 20,449 பணியிடங்களில் தகுதி வாய்ந்த நபர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!




பொறுப்பை தட்டி கழிக்கும் தவெக அரசு
ஆனால், தற்போது வரை அந்த அறிவிப்புக்கு மாறாகவே ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்வது சரியான முறை அல்ல. தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இன்றி இருக்கும் நிலையில், அவர்களின் எதிர்காலத்துக்கும், இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கும் இது எதிராக இருக்கும். பல்வேறு துறைகளிலும் ஒப்பந்த முறை பின்பற்றப்படுவது சமூகநீதிக்கு விரோதமானது ஆகும். இந்த செயல்பாடுகள் தமிழக அரசு தனது பொறுப்புகளை தட்டிக் கழித்து தனியாருக்கு தாரை வார்க்கும் செயல் ஆகும்.
மின்துறையில் நிரந்த பணி நியமனம் வேண்டும்
இனி மின்சாரத் துறையில் புதிய நியமனங்கள் முழுவதும் ஒப்பந்தம் என்று கூறுவது கண்டனத்துக்குரியதாகும். எனவே, மின் கணக்கிட்டு பணிகளை தனியாருக்கு தாரை பார்க்கும் முடிவுகளை தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக கைவிட்டுவிட்டு, நிரந்தர பணி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?