சேலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம்.. நில அளவையருக்கு ஊழல் தடுப்பு போலீசார் கொடுத்த ஷாக்!
Salem Land Surveyor Arrested : சேலம் மாவட்டத்தில் வீட்டின் பட்டாவை பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் கதிரவன். கூலித் தொழிலாளியான இவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயரில் மாற்றுவதற்காக அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணைய வழியில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக, அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவுக்கு நேரில் சென்று தனது விண்ணப்பம் தொடர்பாக கதிரவன் கேட்டுள்ளார். அப்போது, பணியில் இருந்த நில அளவையர் முருகேசன் நிலத்தை அளவீடு செய்து, பட்டா வழங்க பரிந்துரை செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கூலித் தொழிலாளி கதிரவன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, நான் பார்க்கும் கூலி தொழிலில் குடும்பத்தை நடத்தவே வருமானம் சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொழிலாளியிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலை அளவையர்
இதை கேட்டும் மனம் மாறாத நில அளவையர் முருகேசன், தான் கேட்டபடி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும். இல்லையெனில், பட்டா கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த கதிரவன் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர், மறுநாள் கதிரவனை செல்போனில் தொடர்பு கொண்ட நில அளவையர் முருகேசன், தான் கேட்ட பணம் தயாராக உள்ளதா என்று கேட்டுள்ளார்.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் டார்ச்சர்.. கூடுதல் பணிச்சுமை.. ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர்.. நெல்லை காவல் ஆணையர் நடவடிக்கை!




ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் புகார்
இதற்கு, தொழிலாளி கதிரவன் மீண்டும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. லஞ்சம் கொடுக்கவும் விரும்பவில்லை என்று பதில் அளித்துள்ளார். இதற்கு, நில அளவையர் முருகேசன் ரூ. 2,500 தருமாறு பேரம் பேசியுள்ளார். இதற்கும் உடன்படாத கூலித் தொழிலாளி கதிரவன் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்து செல்போனை துண்டித்து விட்டார். தொடர்ந்து, இது தொடர்பாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நில அளவையர்- இடைத்தரகர் ஆகியோர் அதிரடி கைது
அந்த புகாரின் பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நில அளவையரிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பணியில் இருந்த நில அளவையரிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசன் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் பூவரசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!