இன்ஸ்பெக்டர் டார்ச்சர்.. கூடுதல் பணிச்சுமை.. ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர்.. நெல்லை காவல் ஆணையர் நடவடிக்கை!
Tirunelveli Head constable Suspended : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் தொந்தரவு செய்வதாகவும், பணிச் சுமை கூடுதலாக இருப்பதாகவும் கூறி ஆடியோ வெளியிட்ட தலைமை காவலரை மாவட்ட காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் .
நெல்லை மாவட்ட காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜோயல். இவர், தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2002- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சுமார் 24 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு பணியில் கூடுதல் சுமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர் திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையருக்கு பணிச்சுமை குறித்தும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நெல்லையில் தலைமை காவலர் சஸ்பெண்ட்
இந்த நிலையில், ஜோயல் தனது கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்காமல் தற்கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டதன் காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தன்னை துன்புறுத்தியதாக காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டை முன் வைத்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாநகர காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் பேசிய வார்த்தையால் சட்ட சிக்கல்? இதனை தவிர்த்திருக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கூறுவதென்ன!




தலைமை காவலர் வெளியிட்ட ஆடியோ வைரல்
இதனிடையே, தலைமை காவலர் ஜோயல் வெளியிட்ட ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த 35 நாட்களாக எனக்கு கூடுதல் பணி சுமை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் அழகர் தனக்கு கடுமையான மன உளைச்சலும், பணியில் அதிக தொந்தரவும் அளித்து வருகிறார். இதனால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதன் காரணமாக தற்போதைய சூழலில் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட காவல்துறையில் பரபரப்பு
நெல்லை மாநகர காவல் துறையில் உயர் அதிகாரிகள் மீது தலைமை காவலர் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த ஆடியோ திருநெல்வேலியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் ஆணையர், தலைமை காவலர் ஜோயல் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அதன் அடிப்படையிலேயே, தலைமை காவலர் ஜோயல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!