தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..
தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டமிட்ட சதி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றையெல்லாம் தாண்டி இன்று மக்கள் ஆதரவுடன் ஒரு தனிப்பெரும் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது என்றார். "தலைவர் (விஜய்) கூறியது போல, இதெல்லாம் அவருக்குப் பழகிவிட்டது; நீதியை யாராலும் தடுக்க முடியாது, நீதி கண்டிப்பாக வெல்லும்" என்றார்.
சென்னை, மே 08: தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சிப்பதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காமல் உள்ளார். இதற்கு விசிக, மதிமுக சிபிஎம் என பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும், தவெக தரப்பில் இவ்விவகாரம் குறித்து வாய்திறக்காமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின் மக்களுக்கு நன்றி தெரிவித்த பின் தற்போது வரை எதுவும் பொதுவெளியில் பேசவில்லை.
இதையும் படிக்க: தவெக இதை செய்யணும்.. தெளிவாக சொன்ன தமிழ்நாடு ஆளுநர்.. அதிகாரப்பூர்வ அறிக்கையில் சொன்னது என்ன?
சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும்:
இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி அருண்ராஜ், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் அரசியல் சாசனக் கடமை என்று வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாகக் கூறுகின்றன. எனவே, ஆளுநர் காலதாமதம் செய்யாமல் சட்டவிதிகளின்படி நடக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
திமுக – அதிமுக ரகசியக் கூட்டணி?
இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக எழுந்துள்ள தகவல்கள் உண்மை தான். இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார். மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளை இந்த இரு கட்சிகளும் மதிக்கவில்லை என்றும், அவர்களின் இந்த முயற்சி முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக மக்கள் இதை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஓபிஎஸ்-ஐ ஏன் எடப்பாடி பழனிசாமி வெளியே அனுப்பினார்கள். இப்போது ஏன் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார் என்று ஊருக்கே தெரியும் என்றார்.
தவெக-வுக்கு எதிரான சதி:
தமிழக வெற்றி கழகத்தின் மீது தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டமிட்ட சதி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றையெல்லாம் தாண்டி இன்று மக்கள் ஆதரவுடன் ஒரு தனிப்பெரும் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது என்றார். “தலைவர் (விஜய்) கூறியது போல, இதெல்லாம் அவருக்குப் பழகிவிட்டது; நீதியை யாராலும் தடுக்க முடியாது, நீதி கண்டிப்பாக வெல்லும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க : எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்
ஆதரவு கோரும் படலம்:
தற்போது தமிழக வெற்றி கழகம் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக ஐயூஎம்எல் (IUML) கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும், நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், பாஜக போன்ற கட்சிகள் குறித்து சரியான நேரத்தில் தகுந்த முடிவை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும், தற்போது தாங்கள் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.