விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை… சூப்பர் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரி… வதந்தி 2 வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Vadhandhi The Mystery of Mani | தமிழ் சினிமாவில் வெளியாகும் இணையதள தொடர்களில் இன்வெஸ்டிகேஷன் பாணியில் வெளியாகும் தொடர்களில் சில மட்டுமே ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் முன்னதாக வெளியான வதந்தி முதல் பாகம் போல தற்போது வெளியாகி உள்ள வதந்தி இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் லீலை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஆண்ட்ரூ லூயிஸ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமவில் அடுத்தடுத்து கொலைகாரன் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. வெள்ளித்திரையில் இந்த படங்கள் எல்லாம் வரவேற்பைப் பெற்றாலும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான இணையதள தொடர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியானது வதந்தி முதல் பாகம். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் கிடைக்கும் இளம் பெண்ணின் சடலத்தின் மூலம் அந்த வழக்கு தொடங்கப்படும். அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார். இந்த தொடரைப் பார்த்த பலரும் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இரண்டம் பாகம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கிய இந்த வதந்தி தி மிஸ்டரி ஆஃப் மணி என்ற இரண்டாம் பாகம் நேற்று 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த இணையதள தொடர் முதல் பாகத்தை போல விறுவிறுப்பாக உள்ளதா எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மத்திய அமைச்சரின் அடிக்கல் நாட்டு விழாவில் கிடைக்கும் மனித எலும்புக்கூடு:
மதுரை நெடுஞ்சாலையில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் தமிழ் நாட்டிற்கு வந்து அடிக்கல் நாட்ட வருகிறார். அவர் அடிக்கல் நாட்டுவதற்காக ஜேசிபி மூலம் குறிப்பிட்ட இடத்தில் தோண்டப்படுகின்றது. அப்படி தோண்டும் போது அங்கு மனித எலும்புக்கூடு கிடைக்கின்றது. அந்த எலும்புக்கூட்டை தொடர்ந்து பல வதந்திகளும் கிளப்பப்படுகின்றது.




இந்த வழக்கு விசாரணை எஸ்.பியாக உள்ள ரத்திகா நாயர் (நடிகை அனகா) தலைமையில் நடைபெறுகிறது. ரத்திகா நாயர் மதுரைக்கு பனிஷ்மெண்ட் போஸ்டிங்கில் வந்த எஸ்.ஐ மூசா ராசாவிடம் (சசிக்குமார்) இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூற முதலில் தயக்கம் காட்டும் அவர் பிறகு அதனை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை தொடங்குகிறார்.
விசாரணையை தொடங்கி ஒரு வாரத்திற்குள் அந்த எலும்பு கூடு யாருடையது என்று மூசா ராசா கண்டுபிடிக்கிறார். அந்த வழக்கில் சம்பந்தபட்ட நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் விதிக்கிறது. ஆனால் அந்த தண்டனை பெற்ற நபர் இந்த கொலையை செய்யவில்லை என்று மூசா ராசாவிற்கு எண்ணம் தோன்ற அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நினைக்கிறார். அப்படி மூசா ராசா நினைத்தது உண்மையா? அந்த கொலையை யார் செய்தது? என்பது இறுதியில் தெரிய வருகிறது.
விறுவிறுப்பாக செல்லும் வதாந்தி தி மிஸ்டரி ஆஃப் மணி:
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கிய இந்த வதந்தி தி மிஸ்டரி ஆஃப் மணி என்ற இணையதள தொடர் முதல் பாகத்தை போல விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் செல்கிறது. மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த இணையதள தொடர் ஒவ்வொரு எபிசோடுகளும் 40 முதல் 45 நிமிடங்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக சுமார் 5.30 நிமிடங்களை கொண்ட இந்த இணையதள தொடரை பார்க்க ஆரம்பிப்பவர்கள் நிச்சயமாக முடிக்காமல் டிவியை விட்டு எழுந்திருக்க முடியாது. அதனால் இந்த தொடரை பார்க்க நினைப்பவர்கள் இதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
கொண்டாடப்பட வேண்டியவர் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்:
ஓடிடி தளத்தின் பயன்பாடு அதிகரித்த பிறகு பல மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் மற்றும் இணையதள தொடர்கள் வெளியாகிறது. அந்த வரிசையில் தமிழ் மொழியிலும் படைப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதில் ஒரு சில இணையதள தொடர்கள் மட்டுமே மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநராக தமிழ் சினிமாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்ட்ரி க்ரைம் திர்ல்லர் பாணியில் உருவான இந்த வதந்தி தி மிஸ்டரி ஆஃப் மணி என்ற இணையதள தொடரில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் கதாப்பாதிர உருவாக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக உள்ள எஸ்.ஐ. மூசா ராசா, எஸ்.பி. ரத்திகா நாயர் மற்றும் மொடக்கத்தான் மணி கதாப்பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த தொடர் ஒரு மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் என்றாலும் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி தாடி வைத்துள்ளார் என்ற கேள்வி போஸ்டர் வெளியானதில் இருந்து சமூக வலைதளத்தில் கேட்கப்பட்டு வருகின்றது. அதற்கு இந்த தொடரில் இயக்குநர் ஒரு ஜஸ்டிஃபிகேஷனை கொடுத்து உள்ளார். அந்த விசயத்தையே ஒரு தொடராகவும் இயக்கும் அளவிற்கு ஒரு கதை உள்ளது அதில் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள தொடரில் உள்ள கதாப்பாத்திரங்களில் பேச்சு வழக்கு முதல் நடவடிக்கைகள் வரை அந்த மதுரை வட்டார மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் இஸ்லாமியரான மூசா ராசாவின் வாழ்க்கையை காட்டும் போது அவர்களின் நடைமுறைகளையும் மிகவும் சிறப்பாக இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார். அது பாராட்டிற்குரியது.
Also Read… கவின் – நயன்தாராவின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது
நடிகர் சசிக்குமாரும் இஸ்லாமிய கதாப்பாத்திரங்களும்:
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய மொழிகளில் இஸ்லாமியர்களை பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் என்ற அடிப்படையிலேயே சித்தரித்து வருகின்றனர். இந்தியர்களிடையே இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பொதுப்படையான எண்ணம் தோன்ற இந்த சினிமா ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் வாழ்க்கையும் மிக சாதாரணமானது என்றும் படங்களில் காட்டப்பட்டு வருகின்றது. அதில் சசிக்குமாரின் நடிப்பில் முன்னதாக வெளியான அயோத்தி என்ற படம் முக்கிய பங்கை ஆற்றியது. மேலும் அந்தப் படத்தில் இறுதிக் காட்சியில் தான் சசிக்குமார் இஸ்லாமியர் என்பதை வெளிப்படும்.
ஆனால் இந்த தொடரில் ஆரம்பத்திலேயே சசிகுமார் மூசா ராசா என்ற இஸ்லாமியர் வேடத்தில் காட்டப்பட்டது. மேலும் ஒரு இஸ்லாமியரின் வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து மிகவும் அழகாக காட்டப்பட்டு இருந்தது. இந்த இஸ்லாமிய கதாபபாத்திரத்தில் சசிக்குமாரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை இதுவரை பார்க்கவில்லை என்றால் மிஸ் செய்யாமல் பார்த்துவிடுங்கள்.
Also Read… இணையத்தில் வைரலாகும் விஷாலின் மகுடம் பட ட்ரெய்லர்