பிரபல அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயர கஞ்சா செடி…போலீசார் நடவடிக்கை!
Cannabis Cultivation At Stanley Government Hospital: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயர கஞ்சா செடி வளர்ந்திருப்பது தெரியவந்தது. அந்த செடியை போலீசார் வேரூடன் பிடுங்கி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் .
சென்னை, வண்ணாரப்பேட்டையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீவிர சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த மருத்துவமனையில், உள்நோயாளிகள் சிறப்பு வார்டு, சிறை கைதிகள் சிறப்பு வார்டு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதேபோல, மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்திற்காக மரம், செடி, கொடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி
இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் உள்ள கிருமி நீக்கல் மைய கட்டடம் அருகே கஞ்சா செடி வளர்ந்துள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து, மருத்துவமனை தரப்பிலிருந்து காவல் துறைக்கு புகார் சென்றது. அதன் பேரில், போலீஸ் அதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிருமி நீக்கல் மைய கட்டிடத்தின் அருகே சுமார் 3 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ந்து நின்றது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த கஞ்சா செடியை போலீசார் வேரூடன் பிடுங்கி சென்றனர்.
மேலும் படிக்க: மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி…ஒரு மாதத்துக்கு பிறகு தடை நீக்கம்…சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!




மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா செடி வளர்ந்தது எப்படி
மேலும், இந்த இடத்தில் கஞ்சா செடி வளர்ந்தது எப்படி? யாரேனும் இந்த இடத்தில் கஞ்சா செடியை நடவு செய்தனரா? அல்லது கஞ்சா செடியின் விதை விழுந்து இந்த இடத்தில் தானாக முளைத்ததா ? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அண்மைக் காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்கும் சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
இதில், பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததாகவும், வைத்திருந்ததாகவும் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதே போல, வீட்டு தோட்டம், காட்டுப் பகுதிகளில் கஞ்சா செடி வளர்த்ததாக அவ்வப்போது சிலர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறாக, தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னையில் பிரபல அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்து நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு