VIBE WITH MKS.. தமிழ்நாட்டின் இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..
VIBE WITH MKS: வீரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனக்கு ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டார். இளம் வயதில், பள்ளிப் பருவத்தில் ஹாக்கியை விளையாடியதாகவும், கிரிக்கெட்டில் ஹாஃப் ஸ்பின்னராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
சென்னை, டிசம்பர் 25, 2025: தமிழகத்தில் உள்ள இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியாக ‘வைப் வித் எம்கேஎஸ்’ என்ற டிஜிட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களுடன் உரையாடினார். இது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு முற்றிலும் மாறுபட்ட, புத்தம் புதிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதாவது, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டு கலகலப்பாக கலந்துரையாடினார். இந்த சந்திப்பு, அவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்தது.
இளம் வீரர்களுடன் ஒரு கலகலப்பான சந்திப்பு:
Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!
தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும்… pic.twitter.com/3aDHnuW256
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 24, 2025
இந்த நிகழ்ச்சியின் போது, வீரர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் கேஷுவலாக பதில் அளித்தார். அதில், அவருக்கு கிரிக்கெட் மற்றும் ஹாக்கி மீதான ஆர்வம் குறித்தும், இளம்பருவத்தில் அவர் விளையாடிய அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். அவர் கிரிக்கெட்டில் ஹாஃப் ஸ்பின்னராக இருந்ததாகவும், தந்தை கலைஞர் கருணாநிதியுடன் விளையாடிய தருணங்களையும் மகிழ்ச்சியுடன் கலகலப்பாக பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க: 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், எந்த நிலையிலும் எவ்வளவு அழுத்தம் ஏற்பட்டாலும், நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் தனது நிதானத்தை இழக்காமல் அமைதியாக இருப்பது பெரிய ஊக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தோனி ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வந்து இன்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளவர் என்றும், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பள்ளி வகுப்பறையில் புக் கிரிக்கெட் விளையாடிய தருணங்கள்:
தொடர்ந்து வீரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனக்கு ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டார். இளம் வயதில், பள்ளிப் பருவத்தில் ஹாக்கியை விளையாடியதாகவும், கிரிக்கெட்டில் ஹாஃப் ஸ்பின்னராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை…போலீஸ் ஏட்டு மீது அதிரடி நடவடிக்கை!
அதே சமயத்தில், பள்ளி வகுப்பறையில் இருக்கும் போது, கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தின் காரணமாக ‘புக் கிரிக்கெட்’ விளையாடியதாகவும் பகிர்ந்து கொண்டார். அதாவது, எந்த கிரிக்கெட் உபகரணங்களும் இல்லாமல், புத்தகத்தில் உள்ள பக்க எண்களை வைத்து ஸ்கோர்களை கணக்கிட்டு புக் கிரிக்கெட் விளையாடியதாகவும், அந்த காலத்தில் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
கலைஞர் பேட்டிங் செய்ய முதல்வர் ஸ்டாலின் பந்துவீசிய அனுபவம்:
மேலும், இன்று விளையாட நேரமில்லாததால் அதிலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும், ஆனால் இன்றும் யாராவது கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தால் அவர்களிடமிருந்து மட்டையை வாங்கி தானும் விளையாட வேண்டும் என்ற ஆசை மீண்டும் வரும் என்றும் தெரிவித்தார். விளையாட்டின் மீது உள்ள உண்மையான காதல் ஒருபோதும் மங்காது என்றும், தந்தை கலைஞர் கருணாநிதி பேட்டிங் செய்யும்போது தான் பவுலிங் செய்த அனுபவம் இன்னும் மனதில் பசுமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வெற்றி என்பது புத்தகங்களிலும் கோப்பைகளிலும் மட்டுமல்ல என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களிடையே வலியுறுத்திப் பேசினார். ஒரு சாம்பியனின் உண்மையான பலம் என்பது ஒழுக்கம், அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றில்தான் இருக்கிறது என்றும், இளம் வீரர்கள் மத்தியில் இந்த குணங்கள் அதிகமாக வளர வேண்டும் என்றும் கூறினார். அப்படி செய்தால், விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உயரங்களை எட்ட முடியும் என தெரிவித்தார்.