விஜய்-த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து…தவெகவினர் கடும் கண்டனம்!
TVK Condemn Nainar Nagendran : தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை ஸ்டாலின் வைத்துள்ளார். எம். ஜி. ஆர். ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி கே. பழனிசாமி வைத்துள்ளார். என்னை போல் தனியாக கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது 1 சதவீதம் வாக்குகள் பெற்று காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது, விஜய் பாவம் அனுபவம் இல்லாதவர். முதலில் விஜய் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும். அப்படி வந்தால் தான் எல்லாமே நடக்கும். தமிழக வெற்றி கழகத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை.
எனக்கு விஜய் ஒரு ஆளே கிடையாது
இவர்கள் கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வைகுண்டம் போக முடியுமா என்பது போல உள்ளது. இதுதான் விஜய்க்கு பதிலாகும். தமிழக வெற்றி கழகத்திற்கு 32 சதவீத வாக்குகள் இருப்பதாக அவர் எப்படி கூற முடியும். அவர் ஒரு ஆளே கிடையாது என்பது போன்ற கருத்தை நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது கருத்துக்கு தமிழக வெற்றி கழகத்தின் இணை பொது செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா – விருதுகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
பெண்களை கண்ணியமாக பேசுவதே நாகரீக அரசியலாகும்
இதே போல, திமுகவின் தென்சென்னை எம். பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், இந்த நாட்டை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அரசியல் கருத்துக்களை கூறும் போது பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணை பற்றி அவதூறாக பேசுவது அழகல்ல. பெண்களை கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல, தவெக பரப்புர செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், அறிவாலயத்தை திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்கு காய்ச்சல் வருகிறதா. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருப்பதற்கு நயினார் நாகேந்திரன் தகுதியற்றவர்.
அறிவாலயம்-கமலாலயம் ஒன்றாகி விட்டதா
அறிவாலயமும், கமலாலயமும் ஒன்றாகி விட்டதா. ரூ.4 கோடி சிக்கலில் சிக்கி தவிக்கும் ஒரு நபர் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும். கடந்த தேர்தலில் கட்டு கட்டாக பணம் தூக்கி திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்கிறது. முதலில் உங்கள் முதுகில் படிந்துள்ள கரைகளை கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களை கூச செய்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. ரூ.8 லட்சத்தை அபகரித்த கில்லாடி பெண்கள்.. போலீசார் போட்ட காப்பு!



