Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை…நெல்லை நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை!

Nellai POCSO Court Sentences Father To Death: நான்குநேரியில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு நெல்லை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் 7 மாதங்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது .

மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை…நெல்லை நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை!
மகளை சீரழித்த தந்தைக்கு தூக்கு தண்டனை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 24 Dec 2025 14:52 PM IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் 47 வயதான தொழிலாளி. 14 வயதான இவரது மகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பெற்ற மகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, தனது மகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். விபரம் அறியாத அந்த சிறுமியும் அப்பாவி போல இருந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பிணி ஆனார். இதனால், கொடூர தந்தையின் இந்த சம்பவம் வெளியே தெரிந்தது. இது தொடர்பாக நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம்

இந்த நிலையில், நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 24) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகளை விசாரித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, இந்த சம்பவத்தில் பெற்ற மகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தந்தையே இந்த மாதிரியான கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். மேலும், இந்த சம்பவமானது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தென்காசி-தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்…பரபரப்பு பின்னணி!

மகளை சீரழித்த தந்தைக்கு தூக்கு தண்டனை

எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதுடன், அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் உஷா ஆஜரானார். இந்த வழக்கை நாங்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் பிரசன்ன குமார் (தற்போது திருநெல்வேலி மாநகர துணை ஆணையர்) மிக தீவிரமான முறையில் விசாரணை மேற்கொண்டார்.

7 மாதங்களுக்குள் தீர்ப்பளிப்பு

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி, நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து நெல்லை போக்ஸோ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனால், இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்றதுடன் சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து 7 மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் சம்பவத்தில் எச்சரிக்கையாக இருக்கும்

இந்தச் சம்பவம் நடைபெற்ற 7 மாதங்களுக்குள் குற்றவாளிக்கு தக்க தண்டனை வாங்கி கொடுத்த போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்தச் சம்பவம் எச்சரிக்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சீனாவுக்கு தப்பிச்சென்ற நபர்.. வலைவீசி பிடித்த சென்னை மகளிர் போலீஸ்!!