தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்குமா திமுக?.. பாஜகவிற்கு மறைமுக ஆதரவா?.. அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!!
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்காமல் திமுக வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக சாடினார். அவ்வாறு வெளிநடப்பு செய்தால் அது பாஜகவிற்கு மறைமுக ஆதரவு அளிப்பதுடன் தமிழ்நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் செய்யும் துரோகம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மதுரை, ஆகஸ்ட் 09: மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த திமுகவின் நிலப்பாட்டை அமைச்சர் நிர்மல்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, மாநில நலன்களையும் மக்களின் உரிமைகளையும் பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
இதையும் படிக்க: தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!
பாஜகவிற்கு மறைமுக ஆதரவா? – குற்றச்சாட்டு:
செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், “ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பார்த்தால், திமுக தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் முழுமையாக எதிர்த்து வாக்களிக்க வேண்டும். ஆனால், தற்போது திமுக நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. அப்படி வெளிநடப்பு செய்வார்களேயானால், அது இந்த மசோதாவிற்கு திமுக அளிக்கும் மறைமுக ஆதரவாகவே கருதப்படும். இது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் திமுக செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்” என்று சாடினார்.
குடும்பத்தைக் காப்பாற்ற மாநில நலன் அடமானம்:
தொடர்ந்து பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது குடும்பத்தினரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே, தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாரதிய ஜனதா கட்சியிடம் அடமானம் வைத்துவிட்டார்கள் என்றுதான் அனைவரும் நினைக்கத் தோன்றுகிறது. இந்த மசோதா சாதாரணமான மற்ற மசோதாக்களைப் போன்றது அல்ல; இதனால் ஏற்படும் விளைவுகளை மிக எளிதாகக் கடந்துபோக முடியாது. எனவே திமுக வெளிநடப்பு செய்யாமல், நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதைப் பற்றி திமுக தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் தெளிவுபடுத்தப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!
எம்பிக்கள் கூட்டம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள்:
தங்களது எம்பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துப் பேசிய நிர்மல்குமார், “நேற்று நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்திலும் இதே நிலைப்பாடுதான் வலியுறுத்தப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதாவானது சிறுபான்மை மக்களைப் புறக்கணிக்கும் மற்றும் ஒதுக்கும் ஒரு செயலாகும். தமிழகத்தின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதுவே தமிழக மக்களின் குரலாகவும், ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஒரே குரலாகவும் இருக்கும். இந்த விஷயத்தில் திமுக தனது தெளிவான நிலப்பாட்டை தமிழக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.