ராமநாதபுரத்தில் அதிரடி.. ரூ50,000 லஞ்சம் வாங்கிய RDO கையும் களவுமாக கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!
Ramanathapuram Revenue Divisional Officer Arrested: ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி தருவதற்காக ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் கோட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்று ம் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக செயல்பட்டு வருகிறது. இங்கு, சரவண பெருமாள் என்பவர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மானாமதுரை பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் ஒருவர் தனது சூளைக்கு தேவையான சவுடு மணல் அள்ளுவதற்காக அனுமதி கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு அனுமதி வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று அந்த செங்கல் சூளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அப்போது, முதலில் சிறிதளவு பணம் தர வேண்டும் எனவும், பின்னர், முழு பணத்தை தரலாம் எனவும், வருாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் கூறியதாக தெரிகிறது.
மணல் அள்ளுவதற்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்பு
இதற்கும் அந்த சூளையின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், நான் கேட்ட ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்தால் தான் சவுடு மணல் அள்ளுவதற்கான அனுமதியை தருவேன் என்று வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த செங்கல் சூளையின் உரிமையாளர் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: கரூர் பணி நியமனம் ரத்து விவகாரம்.. மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு.. உச்ச நீதிமன்றத்தில் ஆக.14-ல் விசாரணை!!




லஞ்ச பணத்த பெற்ற ஆர்டிஓ அதிரடி கைது
அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாளிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், ராமநாதபுரம் ஆர். டி. ஓ. அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளிடம், அந்த நபர் லஞ்ச பணத்தை கொடுத்தார். இதனை, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பலரிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து. அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வருவாய் கோட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க : விபத்துகளில் முதலிடம் – காப்பாற்றுவதில் கடைசி இடம் – தமிழ்நாட்டுக்கு என்ன ஆச்சு?