AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நில ஆவண முறைகேடு வழக்கு.. மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகள் பதிவு!

சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சிட்கோ நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மனைவி பெயருக்கு மாற்றியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

நில ஆவண முறைகேடு வழக்கு.. மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
மா.சுப்பிரமணியன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Aug 2026 13:41 PM IST

சென்னை, ஆகஸ்ட் 08: சென்னை மாநகராட்சி மேயராகப் பதவி வகித்த காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசு நிலத்தை மனைவியின் பெயருக்கு முறைகேடாக மாற்றி அமைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காந்தா ஆகியோர் மீது எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ஆதரிக்கிறீங்களா… எதிர்க்கிறீங்களா?.. முதல்வர் விஜய் கூட்டிய கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. திருப்பி அடித்த தவெக!!

முறைகேடான ஆவணங்கள் மூலம் பதிவு:

சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பேட்டை தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த காலத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் போலி மற்றும் முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயருக்குப் பெயர் மாற்றம் செய்து கொண்டதாகச் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிப்பு:

இவ்வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காந்தா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

நீதிபதி சஞ்சய் பாபா, அவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மோசடி மற்றும் அதிகார முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டினார். இதற்குப் பதிலளித்த மா.சுப்பிரமணியன் தம்பதியினர், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுப்பதாகவும், இவை முற்றிலும் தவறானவை என்றும் தெரிவித்தனர். இருவரின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

நீதிமன்ற போராட்டங்கள்:

முன்னதாகத் தங்கள் மீதான குற்றச்சாட்டுப் பதிவைத் தள்ளுபடி செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கின் அடுத்தகட்ட சாட்சி விசாரணை ஆகஸ்ட் 31 முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us