ஆதரிக்கிறீங்களா… எதிர்க்கிறீங்களா?.. முதல்வர் விஜய் கூட்டிய கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. திருப்பி அடித்த தவெக!!
CM Vijay MPs Meeting: முதலமைச்சர் விஜய் கூட்டிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா?" என நேரடி ஒற்றைக் கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 08: தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ள ‘தொகுதி மறுசீரமைப்பு’ விவகாரம் மற்றும் மாநிலத்தின் முக்கிய உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் காக்க வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாக இது பார்க்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்தன.
இக்கூட்டத்தைப் புறக்கணித்த திமுக, “இது காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பும் அரசியல் நாடகம்” என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மிகக் கடுமையான பதிலடியும் கேள்விக் கணைகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
திமுக குறித்து சாடல்:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறும்போது, மாநிலத்தின் எதிர்காலத்தையும் உரிமையையும் தீர்மானிக்கும் எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, இக்கூட்டத்தை ‘அரசியல் நாடகம்’ என்று திமுக கூறுவது நகைப்புக்குரியது. உண்மையைச் சொல்லப்போனால், மக்கள் பிரச்சனையில் பங்கேற்காமல் சாக்குப்போக்குகளை அடுக்கிக் கொண்டு ஓடி ஒளிவதுதான் உண்மையான நாடகம். டீலிமிட்டேஷன் விவகாரத்தில் டெல்லியிலும் தமிழகத்திலும் முன்னணியில் நின்று குரல் கொடுத்திருக்க வேண்டிய திமுகவின் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்கள் இக்கூட்டத்தில் நிச்சயம் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், இக்கூட்டத்தைத் தவிர்த்துவிட்டுத் திசைதிருப்பும் வேலைகளில் திமுக ஈடுபடுகிறது.
தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம் குறித்துப் பேச அழைத்தால் வராமல் இருப்பது, திமுகவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் மீதும் மாநில உரிமைகள் மீதும் துளியும் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. ‘குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் தாலாட்டும்’ கதையாகத்தான் திமுகவின் அணுகுமுறை இருக்கிறது என்றார்.
ஒற்றைக் கேள்வியால் திணறடிக்கும் தவெக:
காவிரி விவகாரத்தைச் சுட்டிக்காட்டி திமுக இக்கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்த கேள்விக்குத் தவெக அளித்த அதிரடி விளக்கம், “நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக கொள்கை ரீதியாக ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? இதற்கு திமுகவால் வெளிப்படையாக ஒரு பதிலைச் சொல்ல முடியுமா?
காவிரி விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்திலேயே விவாதிக்கப்பட்டுச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தால், அதில் பங்கேற்காமல் காவிரி பிரச்சனையை சாக்காகச் சொல்வது ஏமாற்று வேலை. டீலிமிட்டேஷனில் திமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதற்கு இதுவரை அவர்களிடம் விடையே இல்லை என்று கூறினார்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
அரசியல் களத்தில் வெடித்துள்ள புதிய விவாதம்:
முதலமைச்சர் விஜய் கூட்டிய முதல் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைத் திமுக, அதிமுக போன்ற முன்னணி திராவிடக் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இக்கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புறக்கணித்த கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அதே நேரத்தில், “திமுகவின் இந்த ஓட்டம் மக்கள் மத்தியில் அவர்களின் போலி மாநில உரிமைக் கோஷத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது” எனத் தவெகவினர் களத்தில் தீவிரப் பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக – தவெக இடையே வெடித்துள்ள இந்த நேருக்கு நேர் அரசியல் மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டை உருவாக்கியுள்ளது.