ஒரே இரவில் கூட்டணி மாற்றம்.. காங்கிரஸ் மீது பாய்ந்த திமுக.. ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்!
DMK Youth Wing Meeting : திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவெக அரசை கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சனிக்கிழமை ( மே 23- ஆம் தேதி) நடைபெற்றது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு, தமிழகத்தில் நடந்த பல்வேறு தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு பல்வேறு எம்எல்ஏக்கள், எம்பிக்களை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. அவர்கள் கட்சியில் உள்ளவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும், காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு காரணம் திமுக தான். இதனை யாரும் மறுக்க முடியாது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவினரின் உழைப்பால் காங்கிரசுக்கு 5 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர்.
நன்றி உணர்வின்றி ஒரே இரவில் கூட்டணி மாறிய காங்கிரஸ்
தேசிய கட்சியான காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாகவே மாநில கட்சியான திமுக எம்எல்ஏக்களின் வாக்குகளை பெற்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் பெற்றனர். இதனை பெற்றுக்கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்காமல், நன்றி உணர்சியும் இல்லாமல் ஒரே இரவில் வேறு கட்சியுடன் கூட்டணிக்கு சென்றுள்ளனர். பழமையான பெரும் இயக்கமான திமுக அரசியலின் அடிப்படை நாகரீகத்தை கூட கடைபிடிக்க முடியாத அளவுக்கு பதவி ஆசை அவர்களின் மூளையே மழுங்கடித்துள்ளது. அடுத்தவர்களின் உழைப்பில் உண்டு கொழுப்பதும், தனது தேவைக்கு ஏற்ப கொள்கையை மறந்து துரோகம் செய்வதும் காங்கிரசுக்கு புதுசு இல்லை.
மேலும் படிக்க: தவெக ஆட்சியிலும் பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்கிறது.. நாதக சீமான் பாய்ச்சல்!




பதவி அளித்தவர்களுக்கும் காங்கிரஸ் துரோகம் செய்யும்
இன்று நமக்கு செய்த துரோகத்தை நாளை பதவி அளித்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்பிய மக்களின் வாக்குகளால் தான் அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்களே தவிர இது அவர்களின் சொந்த செல்வாக்கால் பெற்ற வெற்றி கிடையாது. இதை உணராமல் வரலாறு படைத்து விட்டதாக கூறுகின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்த திமுக அரசு மீது பொய் பிரச்சாரங்களை செய்தவர்கள் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
புதிய ஆட்சி அமைந்தது முதல் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
இந்த ஆட்சி அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தலை விரித்து ஆடுகின்றன. கோவையில் 10 வயது சிறுமி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வந்தவாசியில் ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க: யாரோ தூண்டுதலின் பேரில்…. மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு கருத்து