AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அரசு ரீல்ஸ்- இல் காட்டும் ஆர்வத்தை பெண்கள் பாதுகாப்பில் காட்டவில்லை.. முதல்வர் விஜய் மீது நயினார் பாய்ச்சல்!

Nainar Nagendran condemns CM Vijay: தமிழக வெற்றிக் கழக அரசு ரீல்ஸ் விளம்பரத்தில் காட்டும் ஆர்வத்தை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் காட்டி இருந்தால் கோவையில் சிறுமி கொலை சம்பவம் நடந்திருக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தவெக அரசு ரீல்ஸ்- இல் காட்டும் ஆர்வத்தை பெண்கள் பாதுகாப்பில் காட்டவில்லை.. முதல்வர் விஜய் மீது நயினார் பாய்ச்சல்!
ரீல்ஸ்-இல் காட்டும் ஆர்வத்தை பெண் பாதுகாப்பில் காட்டவில்லை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 May 2026 15:37 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நான் தான் தாய் மாமன் என்று கூறி வரும் முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் இருந்த வேகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டவில்லை. அவ்வாறு, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பில் வேகத்தை காட்டி இருந்தால் கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்காது.

ரீல்ஸ்-இல் காட்டும் ஆர்வத்தை பெண்கள் பாதுகாப்பில் காட்டவில்லை

இதனால், பெற்ற மகளை இழந்து தவித்து வரும் அவரது தாய் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறி தேற்றப் போகிறீர்கள் முதல் அமைச்சரே. மாற்றத்துக்கான நேரம் என்று வெறும் விளம்பர பிரச்சாரம் செய்து வருவதில் உங்கள் தமிழ வெற்றிக் கழக அரசு காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், அக்கறையையும் சிறிதாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காட்டி இருக்கலாம். தமிழகத்தில் தற்போதைய அவசியம் மற்றும் அத்தியாவசியம் என்னவென்றால் சீரழிந்து கிடக்கும் சட்டம்- ஒழுங்கை சமன் செய்வது ஒன்றுதான்.

மேலும் படிக்க: சாதி, வருமான சான்றிதழ்களை பள்ளியிலேயே பெறலாம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

குற்றத்தை முன்னரே தடுப்பது தான் தலைமைக்கு அழகு

தமிழகத்தில் குற்றம் நடந்த பின்னர் குற்றவாளிகளை உடனே கைது செய்து விட்டோம் என்று பெருமைப்படுவதை விட, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை முன்னரே கண்டறிந்து தடுப்பதுதான் ஒரு நல்ல அரசு மற்றும் தலைமைக்கான அழகு ஆகும். ஏனென்றால், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகள் மற்றும் வடுக்கள் காலத்தால் அழியாதவை ஆகும்.

தவெக ஆட்சியில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்

எனவே, தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், அனைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரும் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – அதிர்ச்சி தகவல்

Follow Us