அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!
மூக்கில் உள்ள சைனஸ் மற்றும் சதை வளர்ச்சிக்காக ஆபரேஷன் செய்ய அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, வயிற்றுப் பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனச் சக செவிலியர்கள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். "மூக்கு பிரச்சனைக்கு எதற்காக வயிற்றில் ஆபரேஷன் செய்ய வேண்டும்?" என அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர்.
திருச்சி, மே 23: திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயிற்சி செவிலியர் மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சையால்தான் `வி உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டி, நூற்றுக்கணக்கான செவிலியர் மாணவிகளும், உறவினர்களும் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடிய விடிய அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற மாணவி, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தங்கி பயிற்சி செவிலியராகப் பயின்று வந்துள்ளார். இவருக்குச் சைனஸ் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சி பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, நேற்று காலை வேளையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: “12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!
“மூக்கு பிரச்சனைக்கு வயிற்றில் ஆபரேஷனா?
இருப்பினும், அறுவை சிகிச்சை அரங்கிலேயே அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். சீதாலட்சுமியின் மரணத்திற்குப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று சக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவி சீதாலட்சுமியின் மரணத்தில் கடுமையான மருத்துவ அலட்சியம் இருப்பதாகச் சக பயிற்சி செவிலியர் மாணவிகளும், பெற்றோர்களும் குற்றம் சாட்டி அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கின்றனர். அறுவை சிகிச்சையின் போது மாணவிக்குத் தேவையை விட அதிக அளவிலான மயக்க மருந்து டோஸ் செலுத்தப்பட்டதாக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை:
மூக்கில் உள்ள சைனஸ் மற்றும் சதை வளர்ச்சிக்காக ஆபரேஷன் செய்ய அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, வயிற்றுப் பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனச் சக செவிலியர்கள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். “மூக்கு பிரச்சனைக்கு எதற்காக வயிற்றில் ஆபரேஷன் செய்ய வேண்டும்?” என அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர். மாணவியின் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் சக மாணவிகள் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது விளக்கம் கேட்ட மாணவிகளை அங்கிருந்த மருத்துவக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை அத்துமீறல்:
மேலும், இச்சம்பவம் குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவிகளின் கல்வி மற்றும் படிப்பு ரீதியாகத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்ததாகவும் மாணவிகள் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளனர். மாணவி அதிகாலையில் இறந்த உடனே, பெற்றோரைத் தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், சத்தமில்லாமல் உடலை வாங்கிக் கொண்டு உடனே கிளம்ப வேண்டும் என மிரட்டியதோடு, உயிரிழந்த செவிலியர் மாணவியின் செல்போனையும் பறித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரின் சமாதான பேச்சுவார்த்தை:
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான சக செவிலியர் மாணவிகள் அழுது துடித்தபடி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு வெளியேயுள்ள பிரதான சாலையில் அமர்ந்து பல மணி நேரமாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குத் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, திருச்சியில் இருந்த தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் நேரடியாகப் போராட்டக் களத்திற்கு வந்தனர்.
அழுதுகொண்டிருந்த மாணவிகளையும் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் தங்களை மிரட்டிய மருத்துவக் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். மாணவிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், மிரட்டல் விடுத்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மருத்துவமனை டீன் விளக்கம்:
இவ்விவகாரம் தொடர்பாகத் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாணவிக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே அவர் வென்டிலேட்டர் கருவியின் உதவிக்கு மாற்றப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் செல்போன் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்தும், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் விரிவாக ஆராய்ந்து விசாரணை நடத்த ‘பிரத்யேக மருத்துவக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டீன் குமரவேல் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிக்க: “பவர் உங்கள் கையில்.. பவர் கட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”.. முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!
இருப்பினும், மருத்துவக் குழுவின் அறிக்கை வரும் வரையும், மிரட்டல் விடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையும் போராட்டம் தொடரும் என்ற தொனியில் மாணவிகள் நீதிகேட்டுத் தொடர்ந்து முழக்கமிட்டு வருவதால் திருச்சியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.