AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!

மிகவும் இக்கட்டான மற்றும் துயரமான இந்த நேரத்தில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், திமுக கழகம் எப்போதும் அந்த குடும்பத்திற்குப் பக்க பலமாக துணையாக நிற்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.

“12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!
உதயநிதி ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 May 2026 12:04 PM IST

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ள திமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசின் கீழ் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது என்று சாடியுள்ளார். கோயம்புத்தூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், இந்த விவகாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, கோவையில் தங்கியிருந்த கார்த்தி (33) என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த கொலைக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கார்த்தியின் நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க: கோவை சிறுமி கொலை வழக்கு.. கைதானவருக்கு மே 27 வரை சிறை.. தப்பியோடிய நபருக்கு கால் முறிவு!!

“இந்தியா முழுவதையும் உலுக்கிய கொடூரம்”:

இந்நிலையில், கோவை சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். “இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் தற்சமயம் விடிய விடிய வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த கொலைச் சம்பவத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்ற குரல் இப்போது அனைத்துப் பக்கமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தண்டனையை அரசு விரைந்து பெற்றுத் தர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“கழகம் பெற்றோருக்குத் துணையாக நிற்கும்”:

மிகவும் இக்கட்டான மற்றும் துயரமான இந்த நேரத்தில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், திமுக கழகம் எப்போதும் அந்த குடும்பத்திற்குப் பக்கபலமாக துணையாக நிற்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளார். அதோடு, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசைச் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மிகக் கடுமையாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

12 நாள் ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட குற்றங்கள்:

“புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 12 நாட்களில் மட்டும் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம் மற்றும் தற்போதைய கோவை சிறுமி கடத்திக் கொலை என 30-க்கும் மேற்பட்ட பெரிய குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாகச் செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன.” இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: “பவர் உங்கள் கையில்.. பவர் கட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”.. முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!

முதல்வருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு கொடூரமான சம்பவம் மீண்டும் எங்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், “முதலமைச்சர் அவர்கள் மற்ற பணிகளை விட சட்டம் ஒழுங்கைக் காப்பதற்குத் தன்னுடைய முதல் முக்கியத்துவத்தைத் தர வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us