“இன்னும் 6 மாதங்கள் தான்”.. தவெக அரசுக்கு கெடு விதித்த அனிதா ராதாகிருஷ்ணன்!!
எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிடும் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதுடன், தவெக அரசு 6 மாதத்தில் கவிழும் என்றும், தமக்கு அமைச்சர் பதவி தரப் பேரம் பேசப்பட்டதாகவும் தூத்துக்குடி கூட்டத்தில் பரபரப்பாகப் பேசியுள்ளார்.
தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய்யை தாக்கிப் பேசினார். அதாவது, “விஜய்யின் இந்த ஆட்சி இன்னும் 6 மாதங்கள் கூடத் தொடராது. ஆறு மாத காலத்திற்குள் தவெக ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணை ஏறுவார்” எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெக அரசுக்கு புதிய நெருக்கடி.. சிக்கிய குதிரை பேர விவகார வீடியோ ஆதாரம்.. ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!
எம்ஜிஆரும் விஜய்யும் ஒன்னா?:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் விஜய் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.எல்.சி, எம்.எல்.ஏ மற்றும் திமுகவின் பொருளாளராக இருந்து, அண்ணாவால் பாராட்டப்பட்டு, கலைஞரால் வளர்க்கப்பட்டவர். ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தவர்” என்று குறிப்பிட்ட அவர், சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஒரு பைசாவையாவது விஜய் ஏழைகளுக்குக் கொடுத்திருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்திற்காக மதம் மற்றும் ஆன்மீகத்தை மாறி மாறிப் பயன்படுத்துகிறார் என்றும், திருச்சியில் கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்று முட்டுப்போட்டு நடப்பதும், தேர்தல் முடிந்த பிறகு திருச்செந்தூர் வந்து வேல் தூக்குவதும், கர்நாடக மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வாள் கொடுப்பதும் எம்.ஜி.ஆரைப் போலப் பாவனை செய்யும் நாடகம் என்றும் விமர்சித்தார்.
ரவுடி போல் சுற்றும் ஆதவ் அர்ஜுனா”:
தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவைத் தாக்கிப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “லாட்டரி சீட்டு மன்னனாக இருக்கும் அர்ஜுன் யாதவ் (ஆதவ் அர்ஜுனா) நடந்து வரும்போது ஏதோ ரவுடி மாதிரி நடக்கிறான். ஆட்சிக்கு வந்த உடனேயே இப்படி ரவுடித் தனமாக நடந்தால், ஆட்சி முடிந்த பிறகு உன்னுடைய நிலைமை என்ன ஆகும்?” என்று எச்சரித்தார்.
6 மாதத்தில் ஆட்சி கவிழும் – சவால்:
தவெக அரசை வீழ்த்த திமுக தொண்டர்களுக்கு தைரியம் ஊட்டிய அவர், “இந்த ஆட்சி இன்னும் ஆறு மாத காலத்திற்கு மேல் தாங்காது. ஆறு மாத காலத்திற்குள் இந்த தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும். அப்படிப் போகவில்லை என்றால் பார்ப்போம். மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணன் மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார்; உதயநிதி ஸ்டாலின் கட்சியை வழிநடத்துவார். திருச்சி சிவா போன்றவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்களாவார்கள்” என்று சவால் விடுத்தார்.
அப்படி திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, விஜய் சினிமாவில் எவ்வளவு இன்கம் டாக்ஸ் (வருமான வரி) ஏமாற்றினார் என்பது உள்ளிட்ட அனைத்துத் தப்புகளும் தோண்டியெடுக்கப்பட்டுச் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.
சிறை மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்:
திமுகவினரைக் வளைப்பதற்காக தவெக தரப்பில் இருந்து தமக்குத் தூது அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “என்னை ரகசியமாக அழைத்து, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தால் மந்திரி (அமைச்சர்) பதவி தருவதாகப் பேரம் பேசினார்கள். திமுக காரனை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், தம்மீதும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதும் தவெக அரசு பொய் வழக்குகளைப் போட்டு மிரட்டப் பார்ப்பதாகவும், குண்டாஸ் போன்ற சிறை மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சும் ஆள் தான் இல்லை என்றும், ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே 37 நாட்கள் சிறையில் இருந்தவன் தான் நான் என்றும் கூறினார்.
இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
தவெக அமைச்சர்களைக் கேலி செய்த அனிதா:
தவெக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “ஒரு கல்வி மந்திரி சாதாரணப் பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் சின்னக் குழந்தையிடம் ஆங்கிலத்தில் பேசத் தெரியாமல் முழிக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ டயருக்குக் கீழே புகுந்து விளையாடுகிறார். வானத்திலிருந்து குதித்தது போல் துள்ளி விளையாடும் இவர்களை இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் தூக்கியெறிவார்கள்” என்று கூறினார்.