“இபிஎஸ் தான் எங்களின் பொதுச்செயலாளர்”… வேலுமணி தரப்பு திடீர் பல்டி.. பின்வாங்க காரணம் இதுதான்?..
முன்னதாக, தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ உத்தரவை மீறி எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அவர்கள் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடியாரால் நீக்கப்பட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இறுதி அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு இடம் கிடைக்காததைத் தொடர்ந்து, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்த எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு தங்களது அதிரடி நிலைப்பாட்டில் இருந்து திடீரென பின்வாங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டு தங்களது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: அமைச்சரான வன்னி அரசு, ஷாஜகான்.. வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.. திமுகவினருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!!
கட்சியில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு தான்:
அதிமுகவில் எந்தவித பிளவும் கிடையாது. எங்களுக்குள் சில கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் மட்டுமே நிலவி வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுவது போல, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றும் நோக்கம் எங்களுக்கு அறவே இல்லை. அப்படி ஒரு எண்ணம் எங்களின் கனவிலும் வராது என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “எடப்பாடி பழனிசாமி தான் இன்றைக்கும் கட்சியின் பொதுச்செயலாளர். அவரிடம் தான் பொதுக்குழுவைக் கூட்டக் கோரி மனு அளிக்க உள்ளோம். கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை முறையாக மறுآய்வு செய்து, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களின் ஒரே கோரிக்கை” என்றும் வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்காக தவெக-விற்கு ஆதரவு தரவில்லை:
முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்குத் தாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டு ஆதரவு அளிக்கவில்லை என்று வேலுமணி தெளிவுபடுத்தியுள்ளார். “நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு தரும் முன்பே, தீவிர ‘திமுக எதிர்ப்பு’ மற்றும் ‘மக்கள் நலம்’ என்ற இரண்டு முக்கிய கொள்கை புள்ளிகளின் அடிப்படையில் தான் கரம் கோர்த்தோம் . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முக்கிய திட்டங்களான அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர் மற்றும் குடிமராமத்துத் திட்டங்களை தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை புக்லெட்டை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தவும், 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தவும் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்வாங்கக் காரணம் இதுவா?
முன்னதாக, தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ உத்தரவை மீறி எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அவர்கள் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடியாரால் நீக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான எம்பி பதவி.. ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிப்பு.. தவெகவின் வியூகம் என்ன?..
இந்தச் சூழலில், இன்று காலை நடைபெற்ற இறுதி கட்ட தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு, தமிழக அமைச்சரவையின் அதிகபட்ச எல்லையான 35 அமைச்சர்கள் எண்ணிக்கை எட்டப்பட்டது. இதன் மூலம் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பிற்கு தவெக அமைச்சரவையில் இடம் இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது. இந்த அரசியல் பின்னணியில் தான், வேலுமணி அணி மீண்டும் எடப்பாடி பழனிசாமியைத் தங்களது பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு சமரசப் புள்ளிக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.