சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான எம்பி பதவி.. ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிப்பு.. தவெகவின் வியூகம் என்ன?..
இருப்பினும், தங்களுக்குக் கிடைத்துள்ள முதல் நாடாளுமன்ற வாய்ப்பை நேரடியாகக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்க விஜய் தரப்பு விரும்புமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. எம்ஜிஆர் முதன்முதலில் கட்சித் தொடங்கியபோது திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி மூலம் நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவத்தைப் பதிவு செய்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக இருந்த சி.வி.சண்முகம் அதிமுக சார்பாக போட்டியிட்டார். அங்கு அவர், 82,353 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மே.8ம் தேதி ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள அந்த ஒரு எம்பி இடத்திற்கு, ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி – விஷ்ணு ரெட்டி நியமனம்?
சட்டமன்ற பலமும் தவெக-வின் வெற்றி வாய்ப்பும்:
ஒரே ஒரு மாநிலங்களவை இடத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் நடப்பதால், சட்டமன்றத்தில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்படும். தற்போதைய சட்டசபை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 144 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வலுவான நிலையில் உள்ளது. திமுக மற்றும் அதிமுக இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது இப்போதைய சூழலில் சாத்தியமில்லை என்பதால், போட்டி வேட்பாளர்கள் யாரும் களமிறக்கப்பட வாய்ப்பில்லை. இதானல், தவெக கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளரின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த ஒரு எம்பி சீட்டை தவெக யாருக்கு வழங்கும்? என்ற அரசியல் விவாதம் மேலெழுந்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பா?
இந்த இடைத்தேர்தலில் த.வெ.க கூட்டணியின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி போட்டியிடக் கூடும் எனப் பரவலாகப் பெயர் அடிபடுகிறது. திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, 5 எம்எல்ஏக்களுடன் தவெக ஆட்சி அமைப்பதற்கு முதன்முதலில் ஓடிவந்து ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். அந்த நன்றிக்கடனுக்காகவும், எதிர்காலக் கூட்டணியை வலுப்படுத்துவதற்காகவும் தவெக இந்தச் சீட்டை காங்கிரசுக்கு ஒதுக்க முன்வரலாம் எனக் கருதப்படுகிறது.
தவெகவின் வியூகம் என்ன?
இருப்பினும், தங்களுக்குக் கிடைத்துள்ள முதல் நாடாளுமன்ற வாய்ப்பை நேரடியாகக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்க விஜய் தரப்பு விரும்புமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. எம்ஜிஆர் முதன்முதலில் கட்சித் தொடங்கியபோது திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி மூலம் நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவத்தைப் பதிவு செய்தார். அதேபோல, தவெகவின் சொந்தக் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று விஜய் விரும்பினால், லால்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கிரிட்டிராம் போன்ற அக்கட்சியின் மூத்த சீனியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம். அல்லது, தவெகவிற்கு ஆதரவாக இருக்கும் பொதுவெளியைச் சேர்ந்த ஏதேனும் ஓர் அறிவார்ந்த ஆளுமையை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவும் அக்கட்சி கடந்த மூன்று நாட்களாகத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதையும் படிக்க : விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!
தவெகவுக்கு முக்கியத் தேவை:
தவெக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை, 6 சிலிண்டர் மானியம், தாலிக்குத் தங்கம் போன்ற பெரும் நிதித் தேவை கொண்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. இவற்றைச் செயல்படுத்த மத்திய அரசின் நிதி உதவி தவெக அரசுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. எனவே, இந்த எம்பி சீட் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.