தவெக ஆட்சியிலும் பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்கிறது.. நாதக சீமான் பாய்ச்சல்!
Seeman Condemns TVK Govt: தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டுமென்றார்.
கோவை மாவட்டத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த பகுதியை சேர்ந்த நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு பெண் பிள்ளை கடத்தி செல்லப்பட்டு கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.
தவெக ஆட்சியிலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பெற்ற மகளை இழந்து தவித்து வரும் ஆற்ற முடியா பேரிழப்பை சந்தித்து நிற்கும் சிறுமியின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனி உரிமையையும் உறுதி செய்ய முடியாத ஒரு நாடு நாடாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது சுடுகாடு தான்.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை வழக்கு.. கைதானவருக்கு மே 27 வரை சிறை.. தப்பியோடிய நபருக்கு கால் முறிவு!!
வெட்கி தலை குனிய வேண்டிய பேரவலம்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் இந்த சமூகம் குற்றங்கள் சூழ்ந்த சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறி ஆகும். ஒட்டுமொத்த சமூகமும் வெட்கி தலைகுனிய வேண்டிய பேரவலம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் குற்றங்கள் நிகழ்ந்த பிறகு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அதனை கண்டுனர்ந்து தடுக்கப்பட வேண்டும். இதற்காக, குற்றத் தடுப்பு காவல்துறை அமைக்கப்பட வேண்டும்.
சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்
எந்தவிதமான கொடூர குற்றத்தையும் செய்வதற்குரிய கொடூர சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப் பொருட்களின் புழக்கத்தையும், அதற்கான பரவலையும் முன்னதாகவே ஒழிக்கப்பட வேண்டும். இதுபோல, மற்றொரு பெண்ணோ, சிறுமியும் பலியாக கூடாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் துயர் துடைப்பு தொகை வழங்க வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கோவை சிறுமி வழக்கு – கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் – முதல்வர் விஜய் உறுதி


