தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை.. மாநில தகவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
Private Schools Tuition Fees : தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெரும் கல்வி கட்டணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டண விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் இணையதளங்கள் மற்றும் பள்ளிகளின் நுழைவு வாயில் ஆகியவற்றில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று பள்ளி கல்வித் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டம், சேரன் மாநகரை சேர்ந்த லியாகத் அலி என்பவர் கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விவரங்கள் தொடர்பான தகவலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கு அதிகாரிகள் முறையான தகவல் வழங்காமல் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றி சுமார் 3 ஆண்டுகளாக அந்த மனுவை தாமதமாக்கி வந்தனர். இதன் காரணமாக மனுதாரர் லியாகத் அலி மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி விசாரணை மேற்கொண்டார்.
தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்
இதில், மனுதாரர் லியாகத் அலி கோரிய முழுமையான தகவல்களை தயார் செய்து 2 வாரங்களுக்குள் கட்டணம் இல்லாத விரைவு தபால் மூலம் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் சி. பி. எஸ். சி. மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விபரங்களை பொதுமக்கள் கேட்காமலேயே பள்ளி நுழைவு வாயில் மற்றும் விளம்பர பலகை பள்ளிகளின் இணையதளங்கள் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் வகுப்பு வாரியாக பிரித்து கட்டாயமாக அச்சடித்து வழங்க வேண்டும்.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்.. நெல்லை சரக டிஐஜி உத்தரவு!




விரிவான அறிக்கையை ஜூன் 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
இதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பான அறிக்கையை வருகிற ஜூன் 15- ஆம் தேதிக்குள் ( திங்கள்கிழமை) தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த உத்தரவு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விதி மீறல்களுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி ( கட்டணம் வசூலித்தல் ஒழுங்குமுறை ) திருத்தச் சட்டத்தின் மூலம் இந்த ஒழுங்கு முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மறைமுகமான சேர்க்கை கட்டணம்
இந்தச் சட்டத்தின் கீழ், உயர் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை நிர்ணயிக்கிறது. மேலும், மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எந்த விதமான மறைமுகமான சேர்க்கை கட்டணங்களை வசூலிப்பதை நிறுத்துமாறு பள்ளிகளுக்கு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றும் கூறினார்.
மேலும் படிக்க: கோடை விடுமுறை நிறைவு.. கோவை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!