சமூகநீதி விடுதி மாணவிகளுக்குச் சிறப்புப் பேருந்து வசதி..
கோவை அரசு கலைக்கல்லூரி மாணவிகளின் பயணச் சிரமத்தைக் போக்கும் வகையில், கவுண்டம்பாளையம் சமூகநீதி விடுதியில் இருந்து இயங்கக்கூடிய சிறப்புப் பேருந்து சேவையை அமைச்சர் சம்பத்குமார் இன்று தொடங்கி வைத்தார். தங்களின் கோரிக்கையைச் சில நாட்களிலேயே நிறைவேற்றித் தந்ததற்காக அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் மாணவிகள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
கோவை, ஜூலை 22: கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள சமூகநீதி விடுதியில் தங்கிப் படிக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரத்யேகச் சிறப்புப் பேருந்து சேவையை அமைச்சர் சம்பத்குமார் இன்று தொடங்கி வைத்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சமூகநீதி மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
மாணவிகள் நாள்தோறும் கல்லூரிக்குச் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், காலை வேளையில் பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் நிலவுவதால், கல்லூரிக்கு நேரத்திற்குச் செல்ல முடியாமலும் பேருந்துகளில் ஏற முடியாமலும் மாணவிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.
