“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது!”.. மாணவர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
Scrap NEET exam MK Stalin: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மத்திய அரசுக்கான எச்சரிக்கை மணி என்றும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டிய நேரம் இது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஜூலை 23: நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மருத்துவச் சேர்க்கை உரிமையை மீண்டும் மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதோடு, நீட் தேர்வின் கட்டமைப்புச் சிக்கல்கள் மற்றும் டெல்லியில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்களின் பின்னணி குறித்து அவர் பல்வேறு முக்கியக் கருத்துகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
நீட் தேர்வின் 3 முக்கிய வாக்குறுதிகளும் தோல்வி:
மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் கட்டாயமாக்கிய போது, மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்தது. ஆனால், அந்த மூன்றுமே இன்று தலைகீழாக மாறியுள்ளன என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மாணவர்களின் சுமையைக் குறைத்தல்:
மாணவர்களின் மன அழுத்தத்தையும் நிதிச் சுமையையும் குறைப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று நீட் தேர்வு மாணவர்களுக்கு எண்ணற்ற மன உளைச்சலையும் தற்கொலைகளையுமே பரிசாக அளித்துள்ளது.
வணிகமயமாக்கலைத் தடுத்தல்:
மருத்துவக் கல்வியில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதைத் தடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் ‘கோச்சிங் சென்டர்’ (பயிற்சி மையங்கள்) கலாச்சாரத்தையே நீட் தேர்வு உருவாக்கியுள்ளது.
கல்வித் தரத்தை உயர்த்துதல்:
தேர்வுத் தரம் உயரும் எனக் கூறப்பட்ட நிலையில், நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு குளறுபடிகள் எனத் தொடர் முறைகேடுகளே அரங்கேறி வருகின்றன.
மத்திய அரசுக்கு ‘எச்சரிக்கை மணி’:
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with… pic.twitter.com/WwSQBloykM
— M.K.Stalin (@mkstalin) July 23, 2026
டெல்லி ஜந்தர் மந்தரில் நாடு முழுவதிலுமிருந்து திரண்டு மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் குறித்துப் பேசியுள்ள அவர், “நீட் தேர்வு என்பது வெறும் நடைமுறைச் சார்ந்த சிக்கல் அல்ல; அது ஆரம்பத்திலிருந்தே தவறாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புச் சிக்கல் என்பதைத் தொடக்கம் முதலே திமுக எச்சரித்து வந்தது. இன்று டெல்லியில் மாணவர்கள் குரல் கொடுத்து வருவது மத்திய அரசுக்கான எச்சரிக்கை மணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மாநிலங்களை நம்புங்கள்; நீட்டை ரத்து செய்யுங்கள்!”
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது. சமூக நீதியையும் மாநில உரிமைகளையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.
எனவே, மத்திய அரசு உடனடியாக விழிப்படைந்து, மாநில அரசுகளின் கல்வி அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நிரந்தரத் தீர்வாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.