AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“புதிய திட்டம் எதுவுமில்லை… பெயர்களை மட்டுமே மாற்றுகிறார்கள்!” – தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

காலை உணவுத் திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தவெக அரசு அரசாணை மூலம் மாற்றி அமைத்துள்ள நிலையின் பின்னணியில், புதிய திட்டங்களை அறிவிக்க முடியாமல் முந்தைய திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மட்டுமே தவெக அரசு மாற்றி வருவதாகத் துரைமுருகன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“புதிய திட்டம் எதுவுமில்லை… பெயர்களை மட்டுமே மாற்றுகிறார்கள்!” – தவெக அரசை விளாசிய துரைமுருகன்!
துரைமுருகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Jul 2026 08:38 AM IST

சென்னை, ஜூலை 23: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற 3 மாத காலத்தில், புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் முந்தைய திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி வருவதாக திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கடுமையாகச் சாடியுள்ளார். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்‘ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்கான ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தில்’ இருந்து ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘மகளிர் பயணம்’ என்றும், ‘தாயுமானவர் திட்டம்’ என்பதில் இருந்து ‘வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம்’ என்றும் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: அமைச்சர்கள் ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவது வெட்கக்கேடானது – டிடிவி தினகரன் காட்டம்..

“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தான்!”

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றுவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த துரைமுருகன், “திமுக ஆட்சியில் இத்திட்டத்திற்கு ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்றுதான் பெயர் வைக்கப்பட்டதே தவிர, ‘மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ என்று பெயர் வைக்கப்படவில்லை. ஆனால், புதிய முதலமைச்சர் விஜய் இன்னும் தங்களை மட்டுமே நினைத்துக் கொண்டு, காமராஜர் பெயரை வைப்பதாகக் கூறுகிறார்.

மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்; அதை விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர். அந்த இருவருக்கும்தான் அந்தப் பெயர் பொருந்தும். திமுக ஆட்சியில் ‘அம்மா உணவகம்’ போன்ற பெயர்கள் பெருந்தன்மையுடன் மாற்றப்படாமல் தொடர அனுமதிக்கப்பட்டன. ஆனால், புதிய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியாமல், இருக்கின்ற திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி வருகிறது.”

பேருந்துகளின் வண்ணம் மற்றம்:

அரசுப் பேருந்துகளின் வண்ணத்தை மாற்றுவது மற்றும் திமுக நிர்வாகிகள் கைது குறித்துப் பேசியவர், அரசுப் பேருந்துகளுக்குத் தங்கள் கட்சியின் கொடி வண்ணத்தைப் பூசுவதும், பெயர் மாற்றம் செய்வதும் அரசுக்குப் பெருமை தராது; சிறுமையையே தரும் என்று கூறினார்.

திமுக நிர்வாகிகள் கைது:

விமர்சனம் செய்பவர்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும் அவர் அவற்றைப் புறந்தள்ளினார். ஆனால், இந்த அரசு இதுபோன்ற சில்லறை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

மாணவர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு குறித்துப் பேசிய துரைமுருகன், “எந்த ஆட்சியாக இருந்தாலும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் தடியடி நடத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதே மாணவர் சமுதாயத்திற்குச் செய்யும் மகத்தான காரியமாகும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

மேலும், நாடு முழுவதும் நீட் போராட்டங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமைச்சர்கள் திரைப்பட வெளியீட்டைக் திருவிழாவாகக் கொண்டாட அழைப்பு விடுப்பது அவர்களின் தரத்தையே காட்டுகிறது என்றும் துரைமுருகன் சாடினார்.

Follow Us