முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின் பெயர் மாற்றம்.. 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தி தமிழக அரசு உத்தரவு..
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்திருக்கிறதா? ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஜூலை 22, 2026: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்திருக்கிறதா? ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில், இந்தக் காலை உணவுத் திட்டம் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் காலை உணவுத்திட்டம்:
கடந்த திமுக ஆட்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. 2022ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளன்று, இந்தத் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. அதாவது, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த விரிவாக்கத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்:
இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 17.55 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தச் சூழலில், தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவரான தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் 15 லட்சம் மாணவர்கள் இனி பள்ளிகளிலேயே காலை உணவு சாப்பிடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர்கள் ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவது வெட்கக்கேடானது – டிடிவி தினகரன் காட்டம்..
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்:
சமையல் அறைகள் மற்றும் தேவையான உபகரணங்கள் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் 17ஆம் தேதியும், மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளும் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்தச் சூழலில், ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என தமிழக வெற்றிக் கழக அரசு மாற்றம் செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலில் ‘நான் முதல்வன் திட்டம்’, ‘விடியல் பயணத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. தற்போது ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்’ பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.