AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!

TN Budget key features: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் என்றால் என்ன, அதில் மாநிலத்தின் கடன் நிலவரம், விவசாயக் கடன், காப்பீட்டுத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் புதிய வளர்ச்சி அறிவிப்புகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பது குறித்த விரிவான கட்டுரை தொகுப்பு.

தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!
தலைமைச் செயலகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Jul 2026 10:31 AM IST

ஒரு சாதாரணக் குடும்பத்தில் குடும்பத் தலைவன் மாதம் தோறும் வரும் வருமானத்தைக் கொண்டு அன்றாடச் செலவுகள் மற்றும் எதிர்கால சேமிப்புகளை எவ்வாறு திட்டமிடுகிறாரோ, அதேபோல்தான் மாநில அர சும் தன் வரவு-செலவுக் கணக்குகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தாக்கல் செய்வது ‘ஆண்டு நிதிநிலை அறிக்கை‘ (பட்ஜெட்) எனப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு நிதியாண்டும் (ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரை) அரசு மேற்கொள்ளவுள்ள வருவாய், செலவினங்கள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதே மாநில பட்ஜெட் ஆகும்.

இதையும் படிக்க: “மகளிருக்கு மாதம் ₹2,500!”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

பட்ஜெட் தயாரிப்பும், ஒப்புதலும்:

பட்ஜெட் கூட்டத்தொடருக்குச் சில மாதங்களுக்கு முன்பே நிதித்துறை அமைச்சகம் அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் வரவு-செலவு மதிப்பீடுகளைப் பெற்று பட்ஜெட்டைத் தயாரிக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் காலையில், முதலமைச்சர் தலைமையில் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு முறைப்படி ஒப்புதல் பெறப்படும்.

பேரவையில் பட்ஜெட் தாக்கல்:

சட்டப்பேரவை கூடியதும் நிதி அமைச்சர் ‘ஆண்டு நிதிநிலை அறிக்கை’யைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிப்பார். (சமீபகாலமாக வேளாண்மைத் துறைக்கெனத் தனியாக ‘வேளாண் பட்ஜெட்’ அடுத்த நாள் தாக்கல் செய்யப்படுகிறது). பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று வேறு எந்த அலுவல்களும் நடைபெறாது.

அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்:

பட்ஜெட் உரையைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் (சபாநாயகர்) தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும். இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மானியக் கோரிக்கைகளை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

பொது விவாதம்:

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீது பொது விவாதம் தொடங்கும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிப்பார்கள். விவாதத்தின் இறுதியில் நிதி அமைச்சர் பதிலளித்துப் பேசுவார்.

மானியக் கோரிக்கைகள்:

இதுவே பட்ஜெட் கூட்டத்தொடரின் மிக நீண்ட மற்றும் முக்கியமான பகுதியாகும். ஒவ்வொரு துறைக்கான அமைச்சரும் தங்கள் துறையின் ‘மானியக் கோரிக்கை’ மற்றும் புதிய அறிவிப்புகள் அடங்கிய கொள்கை விளக்கக் குறிப்பைத் தாக்கல் செய்வார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது ஒதுக்கீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து “ஒரு ரூபாய் வெட்டுத் தீர்மானம்” அல்லது குறியீட்டு வெட்டுத் தீர்மானங்களைக் கொண்டு வரலாம். விவாதத்திற்குப் பின் அமைச்சரின் பதிலுரையோடு, அந்தத் துறைக்கான மானியக் கோரிக்கை பேரவையில் வாக்களிப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.

பண ஒதுக்கீட்டு மசோதா:

அனைத்துத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநிலத் தொகு நிதியிலிருந்து பணத்தை எடுத்துச் செலவிட பேரவையில் ‘பண ஒதுக்கீட்டு மசோதா’ மற்றும் ‘நிதி மசோதா’ நிறைவேற்றப்படும். சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின், அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆளுநர் கையொப்பமிட்ட பிறகு பட்ஜெட் சட்டப்பூர்வ வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும்.

பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:

மாநில பட்ஜெட்டில் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மையமாகக் கொண்டு பல்துறை சார்ந்த முக்கிய நிதி ஒதுக்கீடுகளும் திட்டங்களும் இடம்பெறுகின்றன. விவசாயம் மற்றும் பயிர்க் கடன், சமூகப் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை மற்றும் உட்கட்டமைப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

இதையும் படிக்க: Gold Price : ரூ.9,000 சரிவை சந்தித்த தங்கம்.. தற்போது முதலீடு செய்வது சரியானதா?

இடைக்கால பட்ஜெட்:

தேர்தல் வரும் ஆண்டுகள் அல்லது புதிய அரசு பொறுப்பேற்கும் சமயங்களில் முழு பட்ஜெட்டுக்கு பதிலாகச் சில மாதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Follow Us