கோடை விடுமுறை நிறைவு.. கோவை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
Coimbatore Flight Fares Hike: கோடை விடுமுறை முடிந்து பொது மக்கள் ஊர் திரும்புவதால் விமானங்களில் டிக்கெட்ட கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கான விமான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவை டூ சென்னைக்கு ரூ.16,500 டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் 4- ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொட தொடங்குகின்றன. இதன் காரணமாக மாணவ, மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ஆகியவற்றை வாங்கும் பணிகளில் பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்றிருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊர் திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால், சில பயணிகள் விமானங்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர். அதன்படி, கோவைக்கும் ஏராளமான பொதுமக்கள் திரும்பி வர தொடங்கியுள்ளனர்.
கோவை விமானத்தில் ரூ.16,504 டிக்கெட் கட்டணம்
இதனால், வெளியூர்களில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றில் டிக்கெட்டுகள் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே போல, விமான நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.4,774- ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது, ரூ.16,504- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தென்காசி – நெல்லையில் அடுத்தடுத்து அரிவாள் வெட்டு.. 2 நாளில் 12 பேர் அதிரடி கைது.. ரவுடி சுட்டுப்பிடிப்பு!




ரூ.23,407 வரை உயர்ந்த விமான கட்டணம்
இதே போல, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வருவதற்கு சாதாரண நாட்களில் ரூ.4,599- ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.9,031- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு ரூ.6,240- ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.23,070- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து கோவை செல்வதற்கு ரூ.7,201- ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 23,407- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 மடங்கு உயர்த்தப்பட்ட விமான டிக்கெட் கட்டணம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவை வருவதற்கு விமான கட்டணம் ரூ.27,362- ஆக உயர்ந்துள்ளது. இதே போல, கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு ரூ.16,500- ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 3 மடங்கு கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு சிறிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று வர்த்தக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும் விமானங்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் இன்று திருச்சி வருகை.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!