வீதியில் இறங்கிய மாணவர்கள்.. தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்.. தமிழகம் முழுவதும் தீவிரமடைந்த நீட் போராட்டம்!!
TN NEET Protest: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் கல்லூரி, பொது இடங்களில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றும் குண்டுக்கட்டாகத் தூக்கியும் கைது செய்து வருவது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூலை 23: டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவ அமைப்பினர் தீவிர காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றும் குண்டுக்கட்டாகத் தூக்கியும் கைது செய்து வருவது பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர்கள் ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவது வெட்கக்கேடானது – டிடிவி தினகரன் காட்டம்..
காத்திருப்புப் போராட்டமும் கைது நடவடிக்கையும்:
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி, காவல்துறையினர் மாணவர்களைத் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் காத்திருப்புப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இரவிலும் தொடர்ந்த போராட்டம்:
சென்னையில் தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ மாணவர்கள் 2-வது நாளாக இரவிலும் தங்கிக் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் நேரில் சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேசுகையில், “தமிழ்நாடுதான் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முதன்முதலில் தொடங்கியது. தற்போது டெல்லியிலும் நாடு முழுவதும் போராட்டம் பரவி வரும் சூழலில், மாநில அரசு எங்களுக்கு ஆதரவாக நிற்காமல் போராட்டத்தை ஒடுக்குவது மிகவும் வருந்தத்தக்க விஷயம். மாநில அரசு எங்களுக்கு உறுதுணையாக நின்று குரல் கொடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் பரவும் கொந்தளிப்பு:
சென்னை திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கக் கல்லூரியின் நுழைவு வாயிலுக்குக் காவல்துறையினர் பூட்டு போட்டதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
இதேபோல் செங்கல்பட்டு, தேனி, திருப்பூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவ அமைப்பினர் வீதியில் இறங்கி நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.