லாக்கப் மரணம்.. உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
Premalatha Vijayakanth : தமிழகத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். அவர் கூறியதை முழுமையாக பார்க்கலாம்.
தமிழகத்தில் காவல் மரணங்களில் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் சட்டத்துக்கு புறம்பாக மது விற்றதாக காவலர்கள் விசாரணைக்கு அழைத்து சென்று லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னர், இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்க படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம். எனவே, லாக்கப் மரண வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், லாக்கப் மரணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!




லாக்கப் படுகொலை கடும் கண்டனத்துக்குரியது
அந்த குடும்பத்துக்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்க கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், தமிழகத்தில் தொடர்ச்சியாக லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றனர். எனவே, வேலையே பயிரை மேய்ந்தது போல பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தை மீறி லாக்கப் படுகொலை செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழக முதல்வர் விஜய் தலையிட வேண்டும்
தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கவனம் செலுத்தி வரும் காலங்களில் லாக்க படுகொலைகள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!