திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட கூலிப்படை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!
Tiruvallur Hired Gang Arrested : திருவள்ளூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்ய திட்டமிட்ட கூலிப்படையை சேர்ந்த இருவரை காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். பிரபல ரவுடியான இவர், அதே பகுதியை சேர்ந்த தீபன் ராஜ் என்பவரின் மனைவியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலருமான கோமதி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஸ்டீபன் கவனத்துக்கு சென்ற நிலையில், அவர் தனது மனைவி கோமதியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்காததால் அவரை ஸ்டீபன் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூலை 4- ஆம் தேதி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ், அஜித், ஜான், கோமதியின் கள்ளக்காதலனான ரவுடி ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். பிரபல ரவுடி ஜோசப் மீது 10- க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம்
இதில், ஒரு வழக்கில் ரவுடி ஜோசப் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 4 நாட்களாக ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இவரது வருகை குறித்து தகவல் அறிந்த ஸ்டீபன் ராஜ், தனது மனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த கள்ளக்காதலன் ஜோசப்பை கூலிப்படை மூலமாக கொலை செய்ய திட்டம் தீட்டினார். ஆனால், இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரணித் சைபர் கிரைம் போலீசார் மூலமாக தெரிந்து கொண்டார்.
மேலும் படிக்க: தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தடைபட இதுவே மூல காரணம்.. உண்மையை போட்டுடைத்த ராகுல் காந்தி!




ஆயுதங்களுடன் காத்திருந்த கூலிப்படையினர்
அதன்படி, சிறப்பு தனிப் படை உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு வருகை தரும் ஜோசப்பை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டது. இதற்காக, ஒரு ஆட்டோவில் ஸ்டீபன் ராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தது. ஆனால், ரவுடி ஜோசப் நீண்ட நேரம் ஆகியும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வராததால், அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இருவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
தொடர்ந்து, நல்லூர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த கூலிப்படையை சிறப்பு தனி படையினர் சுற்றி வளைத்தனர். இதில், ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 3 பேர் தப்பி ஓடிய நிலையில் திருநின்றவூரை சேர்ந்த அசோக்குமார் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: 200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 4 மடங்கு மின் கட்டணமா? தவெக அரசுக்கு எதிராக சீறிய சீமான்!